அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்!

வாஷிங்டன் (30 மே 2020): உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உலகம் முழுக்க நடைபெறும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக, ஐ.நா சபையின் கிளை அமைப்பாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் உலக சுகாதார நிறுவனம்.

சுமார் 194 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகத் தற்போது வரை இருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதராவாக இருப்பதுதெளிவாகத் தெரிகிறது. பெய்ஜிங்கால் அது கட்டுப்படுத்தப்படுகிறது. கொரோனா விவகாரத்தில் சீனாவின் பேச்சைக் கேட்டு உலகத்தை தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது. ” என்று தெரிவித்தார்

மேலும், “உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா தரப்பில் இதுவரை வழங்கப்பட்டு வந்த பங்குத்தொகையான 400 கோடி டாலர்களும் வேறு சுகாதார அமைப்புகளுக்கு வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.