ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால்தான் அதிக உயிரிழப்பு – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!

832

வாஷிங்டன் (23 ஏப் 2020): கொரோனாவுக்கு வழங்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால்தான் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இன்றளவும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போன்று தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு, இந்தியாவில் மலேரியாவுக்கு தருகிற ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் நன்றாக வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.

ஆனால் கொரோனாவா அதிக பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்கா அதிலிருந்து விடுபட மலேரியா மருந்தை அந்நாட்டு நோயாளிகளுக்கு வழங்க முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி, இந்த மாத்திரைகளை ஏராளமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியா ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் தரவில்லை என்றால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து இந்த மாத்திரைகள் மீதான ஏற்றுமதி தடையை இந்திய அரசு விலக்கிக்கொண்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அமெரிக்காவில் சுமார் 3 கோடி மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த மாத்திரைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்தவர்களுக்கு உரிய பலனைத் தரவில்லை என்று அமெரிக்காவில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அங்கு தேசிய சுகாதார நிறுவனமும், வெர்ஜீனியா பல்கலைக்கழகமும் ஆய்வு செய்துள்ளன.

அதில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்களுக்கு இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தனியாகவோ, அஜித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மாத்திரையுடன் சேர்த்தோ தந்தபோதும், இறப்பு விகிதங்களை குறைக்கத்தவறி விட்டது. மேலும், இறப்புவிகிதங்களை கூடுதலாக பதிவு செய்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.