ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு!

புதுடெல்லி (26 மே 2020): ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது.

ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தேவை திடீரென அதிகரித்தது.

அமெரிக்காவை கொரோனா தாக்குதலில் இருந்து காக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அதிகம் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டலும் விடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்தை அதிக அளவில் பெற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தினமும் சாப்பிடுகிறேன் , உங்கள் முன் நலமாக இருக்கிறேன் எனவும் அறிவித்தார் டிரம்ப்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலும் மாரடைப்பு போன்ற சிக்கல்களுக்கு இட்டுச்செல்வதால் கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், லான்சட் மருத்துவ ஆய்விதழ் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெண்டிலேட்டர் பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.