ஊடக அறம் எப்படியானது? கருத்துச் சுதந்திரம் யாருக்கானது? – அ.குமரேசன்

Share this News:

“ஊடக தர்மம் – இன்றைய நிலை.” – இப்படியொரு தலைப்பில் வாசகர்களோடு உரையாடுகிற வாய்ப்பொன்று கிடைத்தது. ‘துக்ளக் ரீடர்ஸ் கிளப்’ என்ற குழு அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது (பிப்ரவரி 28). அதில் பங்கேற்ற அன்பர்கள், தனிப்பட்ட ஈடுபாடு முதல் பொதுவான நிலைமைகள் வரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களில் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்பியதன் விளைவே இந்தக் கட்டுரை.
சிறு வயதிலிருந்தே எனக்கு ஊடகத்துறை மீது காதல். கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு தேடல்களுக்காகச் சுற்றத் தொடங்கிய நாட்களில் நாட்குறிப்பேட்டில், “எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறேன்” என்று ஒரு கேள்வியைப் போட்டு, ”ஏதேனும் பத்திரிகை அலுவலகத்தில் காகிதங்களை மடித்து வைக்கிற வேலை கிடைத்தாலும் சரி, இசைக்குழு ஒன்றில் இசைக்கருவிகளைத் தூசி துடைத்து வைக்கிற வேலை கிடைத்தாலும் சரி, மனநிறைவோடு செய்வேன்,” என்று எழுதிவைத்தேன். இசைத்துறை என்னிடமிருந்து தப்பித்துக்கொண்டது, பத்திரிகைத்துறையில் மாட்டிக்கொண்டேன் – மனநிறைவோடு. அதிலும் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகையிலேயே இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பில் இரட்டிப்பு மனநிறைவு.
தகவல் சொல்வது மட்டுமல்ல…
யாரிடமும் கேள்வி கேட்க முடியும், அவர்களுடைய பதில்களை மக்களிடம் சொல்ல முடியும் என்ற செயல்முறையால் மட்டுமல்ல, ஊடகச் செயல்பாடு என்பது வெறும் தகவல்களைத் தெரிவிப்பது மட்டுமல்ல, சமூக மாற்றங்களுக்குப் பங்களிப்பது என்ற உணர்வோடும் ஈடுபடுவதால், அலுவலகத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற பிறகும் பத்திரிகையாளராகத் தொடர்ந்து செயல்பட முடிகிறது. பூமியில் ஆதி மனிதர்கள் பரிணமித்ததிலிருந்தே, தெரிந்து கொண்டதையும் புரிந்துகொண்டதையும் சக மனிதர்களுக்கு, ஒலிக்குறிகளும் சைகையும் கலந்த முதல் மொழியின் வழியாகத் தெரிவிக்கத் தொடங்கினார்களே, அப்போதே ஊடகச் செயல்பாடு தொடங்கிவிட்டது. அதனால்தான் மனித குலம் உலக சமுதாயமாக வளர்ச்சியடைந்தது. ஆம், அடிப்படையிலேயே –ஊடகச் செயல்பாடு என்பது மாற்றத்திற்காகத்தான். ஆங்கிலத்தில் சொல்வதானால், ஃபங்ஷனிங் ஆஃப் மீடியா இஸ் நாட் ஃபார் ஜஸ்ட் கிவிங் இன்ஃபர்மேஷன் டு தி சொசைட்டி, பட் ஃபார் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆஃப் தி சொசைட்டி.

ஊடக உலகில் நடுநிலை என்பது ஒரு பாசாங்கான வார்த்தை என்பதே என் கருத்து. எந்த ஊடக நிறுவனமும் முழு நடுநிலையாக இல்லை, அப்படி இருக்கத் தேவையுமில்லை. நாங்கள் இந்தப் பக்கம்தான் என்று ஒப்புக்கொண்டு அறிவித்துச் செயல்படுவதுதான் நேர்மை. ஒரு நீதிபதி தன்னிடம் வருகிற வழக்கில் இரு தரப்புக்கும் நடுநிலையாக நின்று சம வாய்ப்பளித்து விசாரிப்பார், தீர்ப்பளிக்கிறபோது யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்குச் சாதமாக ஆணையிடுவார்.

அது போலவே ஒரு ஊடகவியலாளரும் ஒரு பிரச்சினையின் பல தரப்புக் கோணங்களையும் விசாரித்து, செய்தியாக்குகிறபோது எந்தப் பக்கம் நியாயமோ அந்தப் பக்கத்திற்கு ஆதரவாக வெளியிட வேண்டும். நடுநிலை என்ற பெயரில், அவர் அப்படிச் சொல்கிறார், இவர் இப்படிச் சொல்கிறார் என்று சொல்லிவிட்டு, வாசகர்கள் தாங்களாகவே முடிவு செய்துகொள்ளட்டும் என்று விடுவது உண்மையான நடுநிலை அல்ல. ஆனால் அதுதான் பெரும்பாலான நிறுவனங்களில் நடக்கிறது.

அதுவே ஒரு நிலைப்பாடுதான்

எந்தவொரு நிறுவனமும், ஊடகவியலாளரும் தங்களது நிலைப்பாட்டிலிருந்தே அல்லது கண்ணோட்டத்திலிருந்தே நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும், அணுக வேண்டும், வெளியிட வேண்டும். நிலைப்பாடு சாராமல் வெளியிடுவதாகச் சொல்வதே, ஒருவகையில் ஒருபக்கச் சார்பான நிலைப்பாடுதான். பாதிக்கப்பட்டவர்களின் குரலை எதிரொலிக்கத் தவறுவது அந்த நிலைப்பாட்டிலிருந்தே வருகிறது.

தொழிலாளர் போராட்டங்கள் என்று வருகிறபோது சில ஊடகங்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்குப் பாதிப்பு என்றும், சில ஊடகங்கள் போராட்டம் பிசுபிசுத்தது என்றும் வெளியிடுவது பற்றி ஒரு அன்பர் கேட்டார். இரண்டுமே முரண்பாடான செய்திகள் போலத் தெரிந்தாலும், அடிப்படையில் தொழிலாளர்களுக்கு எதிரான செய்திகள்தான். எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கினார்கள், தற்போது, தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டச் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டது உண்மை. ஆனால் எப்படி வெளியிட்டார்கள்?

திடீர் வேலைநிறுத்தத்தால் பேருந்துகள் இயங்கவில்லை, பொதுமக்களுக்குக் கடும் அவதி என்ற கோணத்தில்தானே பெரும்பாலும் செய்திகள் வந்தன? இப்படிப்பட்ட ஒரு விரிவான வேலைநிறுத்தப் போராட்டம் திடீரென வந்துவிடுமா? நிர்வாகத்திற்கு முறைப்படி வேண்டுகோள் வைப்பது, பேச்சுவார்த்தைகளுக்குக் கோரிக்கை விடுப்பது, சங்கங்களுக்கிடையே பொதுக்கருத்துக்கு வருவது, அடையாளப் போராட்டங்கள் நடத்துவது என்ற பல கட்டங்களைத் தாண்டிய பிறகுதான், எதற்குமே நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை என்கிற கட்டத்தில்தான், வேலைநிறுத்த அறிவிப்பு முறைப்படி கொடுக்கப்படுகிறது. அந்தத் தேதி வருவதற்குள் ஒரு முடிவுக்கு வராதது யாருடைய பிழை? வேறு வழியற்ற நிலையில்தான் அறிவித்தபடி வேலைநிறுத்தம் தொடங்குகிறது.

தொழிலாளர் கோரிக்கைகளில் நியாயம் இல்லை என்று ஒரு ஊடகம் கருதலாம். அதை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், திடீர் வேலைநிறுத்தம் என்று சொல்வது தவறல்லவா? அதே போல், போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு கொடுக்காமல் வைத்திருக்கிற பல கோடிக்கணக்கான நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட, பொதுத்துறையைப் பாதுகாப்பதற்கான முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கிறபோது, ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தம் என்பதை மட்டுமே செய்திகளில் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுவதில், நடுநிலை எங்கே இருககிறது?

வி.மு., வி.பி.

இந்தியாவில் ஊடகச் செயல்பாட்டை நான் வி-மு., வி.பி. என்று பிரித்துச் சொல்வதுண்டு. விடுதலைக்கு முன், விடுதலைக்குப் பின். விடுதலைக்கு முன் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு அங்கமாக அன்றைய ஊடகங்களாகிய பத்திரிகைகள் இயங்கின. விடுதலைக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வணிகமயமாகி, இன்று அவர்களே கார்ப்பரேட் நிறுவனங்களாகவும் உருவெடுத்துள்ளனர். ஆகவே கார்ப்பரேட்டியத்திற்கு ஆதரவான செய்திகளும் சிந்தனைகளும் அதிகமாக வருகின்றன.

பல ஊடக நிறுவனங்கள் பெண்களை ஆண்களின் ரசனைக்குரிய பிறவிகளாகவே மீண்டும் மீண்டும் சித்தரித்துக்கொண்டிருக்கின்றன. அதில் அந்த நிறுவனங்களின் ஆணாதிக்க ஆதரவுப் போக்கு வெளிப்படவில்லையா? நடுநிலை என்பதை இப்படியான சமூக, பண்பாட்டுச் சூழல்கள் தொடர்பான அணுகுமுறைகளோடும் பொருத்திக் பார்க்க வேண்டும்.

சுதந்திரத்தைப் பறிகொடுக்கலாமோ?

ஆக, ஊடகங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. விமர்சிப்பது மக்களின் உரிமையும் கூட. இப்படிப்பட்ட விமர்சனங்களை வைக்கிறபோது, ஊடகச் சுதந்திரத்தை முழுமையாக உயர்த்திப் பிடித்தாக வேண்டும். அதற்கு ஏற்பட்டிருககிற அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள் பற்றிய கவலைகளை ஊடகவியலாளர்களோடு சேர்ந்து பகிர்ந்திட வேண்டும். அவர்களுடைய வெளிப்பாட்டு உரிமைக்குத் தோள் கொடுக்க வேண்டும்.

ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரே செய்தியை இரண்டு ஊடகங்கள் இரண்டு விதமாகச் சித்தரிப்பது நியாயமா என்ற கேள்வி நியாயமானது. நடுநிலை என்பதாக இல்லை, அவரவர் நிலைப்பாட்டிலிருந்தும் கண்ணோட்டத்திலிருந்துமே செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று முதலில் குறிப்பிட்டது சரியானது என்பதைத்தானே இது காட்டுகிறது?

சரியான செய்தியை அறிவது எப்படி? இனிமேல் அந்தத் தொலைக்காட்சியைப் பார்க்க மாட்டேன் என்றோ, இந்தப் பத்திரிகையைப் படிக்க மாட்டேன் என்றோ முடிவெடுப்பதால் பயனில்லை. மாறாக, ஊடகங்களையும் அவற்றின் சித்தரிப்புகளையும் ஒப்பிடுங்கள். கண்ணோட்டங்கள் என்னவென்று விவாதியுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உங்களின் விமர்சனத்தைத் தெரிவியுங்கள். இந்தத் தொடர்ச்சியான செயல்பாடு ஊடக நிறுவனங்களின் அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும், சரியான செய்திகளை அறிவது எப்படி என்ற பயிற்சியும் நமக்குக் கிடைக்கும். ஒரு நிறுவனத்தின் பத்திரிகையை அல்லது தொலைக்காட்சியை மட்டுமே பார்ப்பேன், அவர்கள் என்ன சொன்னாலும் நம்புவேன் என்ற விசுவாசத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

இந்தியாவின் இடம்

‘எல்லைகள் தாண்டிய செய்தியாளர்கள்’ என்ற உலகளாவிய அமைப்பு ஆண்டுதோறும் 180 நாடுகளில் ஆய்வு நடத்தி கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர நிலைமை பற்றி அறிக்கை வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி இந்தியா 142வது இடத்தில் இருக்கிறது. நமக்குப் பின்னால் 38 நாடுகள் இருக்கின்றன என்று பெருமைப்படத்தக்க நிலையா இது? நமக்கு முன்னால் 141 நாடுகள் இருக்கின்றன என்ற குமுறல் அல்லவா ஏற்பட வேண்டும்? அந்த அறிக்கை நாடுகளின் அரசுகள் எடுக்கிற நடவடிக்கைகளை மட்டும் வைத்துத் தயாரிக்கப்படுவதில்லை. இனம், மதம், சமூகம் உள்ளிட்டவை சார்ந்து இயங்கக்கூடிய பல்வேறு அமைப்புகளிடமிருந்தும், அவற்றின் ஆட்களிடமிருந்தும் வருகிற தாக்குதல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

ஆட்சியாளர்களை விமர்சிக்கிற எழுத்துகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன என்று கேட்கிறீர்கள். பொதுவான விமர்சனங்களை எழுதுவதில் பிரச்சினை இல்லைதான். ஆனால் பிரச்சினைகளைக் கூர்மையாக அலசி, தங்கள் கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்துகிறபோது வழக்குத் தொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பாய்கின்றன. பலர் மிகுந்த எச்சரிக்கையோடு எழுத வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதுதானா என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.

வாசகர் உரிமை

இது ஊடகவியலாளர்களுக்கான கவலை மட்டுமல்ல. வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் உரிய கவலைதான். ஏனென்றால், ஒரு கருத்தைச் சுதந்திரமாக வெளியிடுகிற உரிமையைப் போலவே, அந்தக் கருத்தை அறிகிற உரிமையும் அடிப்படையானது. அந்த உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரை அல்லது சித்தரிப்பு தவறானது என்று கருதுவீர்களானால் அதைக் கறாராக விமர்சியுங்கள். அது உங்கள் உரிமை. அதேவேளையில் அந்தச் செய்தியை அல்லது கட்டுரையை அல்லது சித்தரிப்பை வெளிப்படுத்தும் உரிமைக்கு ஆதரவாக வாருங்கள். அது உங்களின் கருத்தறியும் உரிமையோடு இணைந்தது என்ற புரிதலோடு வாருங்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆள்கிற நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் இருக்கிறதா என்ற கேள்வி, எதிர்பார்க்கப்பட்டது போலவே வந்தது. அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்களை அங்கீகரித்து இந்தக் கேள்வி வருமானால் பொருத்தமானது. பல நாடுகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மக்கள் தங்கள் ஏற்பின்மைகளை வெளிப்படுத்துவதற்கான மாற்று ஏற்பாடுகள் அந்த நாடுகளில் செய்யப்பட்டிருப்பதையும் காணத் தவறக்கூடாது. ஆனாலும், ஒப்பிடுகிறபோது, அந்த நாடுகளில் ஊடகச் சுதந்திரம் எந்த அளவில் இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியோ உடன்பாடோ இல்லை. மாற்றத்திற்கான சித்தாந்தத்தின் மீது உலக மக்களுக்கு நம்பிக்கையை வளர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அந்த அரசுகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதிலிருந்தே அதை வளர்க்க முடியும் என்பதை உணர வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

தொலைக்காட்சி விவாத நெறியாளர்கள் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே கார்ப்பரேட்டியத்திற்கு எதிரான கருத்துகளைப் பேசுகிறார்கள், ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களில் சிவப்புச் சிந்தனையாளர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் உண்மைக்கு மாறாகப் பரப்பப்படுகிற எண்ணங்கள்தான். விவாதங்களில் எல்லாத் தரப்பினரும் தங்கள் கருத்துகளைச் சொல்வதற்கு சம வாய்ப்பளிக்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் அந்தக் குறுகிய நேர வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதே முக்கியம். அதே வேளையில் ஊடகவியலாளர்கள் தங்களுக்கென நிலைப்பாடு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள், இருக்க வேண்டும். ஆனால், அதை எந்த அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது கார்ப்பரேட் நிர்வாகங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை மீறிவிட்டதாகச் சொல்லி வெளியேற்றப்படுவதும் அவ்வப்போது நடக்கத்தானே செய்கிறது?

மத்திய அரசோ மாநில அரசோ மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கிறபோது ‘தீக்கதிர்’ அந்தச் செய்திகளை வெளியிடுவதில்லையே என்று ஒரு அன்பர் கேட்டிருக்கிறார். அந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே நன்மையளிப்பவைதானா என்ற கண்ணோட்டத்திலிருந்தே அவற்றைப் பற்றிய செய்திகளும் கருத்துகளும் வெளியிடப்படுகின்றன. மற்றபடி, மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கும் திட்டங்கள், செயல்பாடுகள் என்று வருகிறபோது அந்தச் செய்திகள் வெளியிடப்படுகின்றனவா இல்லையா என்பதை அறிய ஒரு வழி இருக்கிறது. தொடர்ந்து ‘தீக்கதிர்’ நாளேட்டையும் வாசிப்பதுதான் அந்த வழி.

நன்றி – மின்னம்பலம்


Share this News:

Leave a Reply