கொரோனா காலத்தில் இவ்வளவு அவசர தீர்ப்பு ஏன்? – கவுசல்யா கேள்வி!

Share this News:

எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிக்கிறது. முதலில் அன்னலட்சுமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்.

இப்போது சின்னச்சாமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களுக்கு மரணதண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

முதலில் இவ்வளவு அவசரமாக இந்தக் கொரானா காலத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமா… சமூகம் பெரும்பாலும் முடங்கியுள்ள சூழலில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது எனக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல தமிழக அரசு இந்த வழக்கைப் போதிய முனைப்போடும் அக்கறையோடும் நடத்தியிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதற்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதற்கும் இந்த இரண்டு காலங்களில் என்னோடு அரசு தரப்பு கொண்டிருந்த தொடர்புக்கும் பெருத்த வேறுபாட்டை உணர்கிறேன். ஆனால் இன்னும் நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. எனது சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு தமிழக அரசால் எடுத்துச் செல்லப்படும் என நம்புகிறேன். அப்படி நடத்தப்படும் போது உரிய சட்டக் கலந்தாய்வு செய்து எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக் கொள்வேன். ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டேன். இன்னும் வேகமெடுத்து எனது போராட்டத்தைத் தொடருவேன். மிகக் குறிப்பாக சின்னச்சாமி அவர்களும் அன்னலட்சுமி அவர்களும் தண்டனை பெற வேண்டும். அதுதான் சங்கருக்குரிய குற்றவியல் நீதியாக இருக்கும்! என் சங்கருக்கு உரிய நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தை இன்னும் முனைப்புடன் கவனமெடுத்துத் தொடர்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கர் கொலைக்கு நேரடிப் பொறுப்பானவர்கள் முற்காரணமானவர்கள் இப்போது ஆயுள்தண்டனை பெற்றவர்களா அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பவர்களா என்கிற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பான்… இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காதே..!

மீண்டும் சொல்கிறேன்… சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். குறிப்பாக சின்னச்சாமி, அன்னலட்சுமி ஆகியோருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வரை ஓய்ந்துவிடமாட்டேன்.

-Gowsi Shankar


Share this News: