The Kashmir Files – ஆபத்தான சினிமா!

Share this News:

ரசியல் மற்றும் உண்மைச் சம்பவங்கள் குறித்தான படங்களை பெரும்பாலும் இரண்டு வகைமைக்குள் அடக்கிவிடலாம். சில திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பான பிரசாரத் தொனி எட்டிப் பார்க்கும். சில படங்கள் ஆரோக்கிய அரசியலை முன்னெடுத்து, அது தொடர்பாக நம்மைச் சிந்திக்க வைக்கும். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் வரும் காட்சிகள் உண்மை என்ற பெயரில் வன்மத்தை ஆங்காங்கே விதைத்து நம்மை ஒருவித மன உளைச்சலுக்குள் தள்ளிவிடுகிறது.

1990களில் நடந்த காஷ்மீரி பண்டிட்களின் படுகொலைகள் நிச்சயம் பேசப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை என்பது திரைப்படமாக, ஆவணப்படமாக, புத்தகங்களாக வந்து வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை. இதற்கு முன்பும் அப்படியான படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், பாதி உண்மையை மட்டும் வைத்துக்கொண்டு, வெவ்வேறு சம்பவங்களைக் கற்பனையாகத் தொகுத்து ஒரு சம்பவமாக திரித்து சித்திரிக்கிறது இந்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.

இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களைக் கோமாளிகளாக்கியும், அங்கு பாடம் நடத்துபவர்களை பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்களாக்கியும் காட்சிப்படுத்தியிருக்கிறார் விவேக் அக்னிஹோத்ரி. 30 ஆண்டுகளாக தங்களின் சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் மறு குடியமர்வுக்கு இரு பெரும் கட்சிகளின் புறக்கணிப்பை மட்டுமே பரிசாகப் பெற்றுவரும் காஷ்மீரி பண்டிட்களின் வாழ்க்கையை தன் அரசியலுக்கு இரையாக்கியிருக்கிறார் விவேக் அக்னிஹோத்திரி.

கிருஷ்ணா பண்டிட் என்கிற ANU மாணவரைச் சுற்றி நடக்கிறது காஷ்மீரி ஃபைல்ஸ் கதை. கிருஷ்ணாவின் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகச் சொல்லி அவரை வளர்க்கிறார் கிருஷ்ணாவின் தாத்தாவான புஷ்கர் நாத். ஆனால், உண்மை வேறு. கிருஷ்ணா படிக்கும் கல்லூரியில் இருக்கும் பெண் பேராசிரியை ஒருவர் காஷ்மிரின் ஒரு முகத்தை அவருக்குக் காண்பிக்கிறார். புஷ்கர் நாத்தின் பால்ய நண்பர்கள் கிருஷ்ணாவுக்கு காஷ்மீரின் வேறொரு முகத்தைக் காண்பிக்கிறார்கள். 30 ஆண்டுகளாக தங்கள் தரப்பு நியாயத்துக்காகப் போராடும் புஷ்கர் நாத்தின் நண்பரான பிரம்மா, பெண் பேராசிரியையின் கூற்றை முழுவதுமாக நிராகரிக்கிறார். எது உண்மை, எது பொய், கிருஷ்ணாவின் பெற்றோருக்கும் சகோதரருக்கும் உண்மையில் என்ன நடந்தது, 1990களில் காஷ்மீரில் அப்படி என்னதான் நடந்தது போன்றவற்றை ‘நான்-லீனியர்’ முறையில் சொல்கிறது இந்த ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ்’.

நிஜத்திலேயே காஷ்மீரி பண்டிட்டான அனுபம் கேர்தான் புஷ்கர் நாத்தாக நடித்திருக்கிறார். மறதி நோய், கண் பார்வை கோளாறு போன்றவற்றால் அவதிப்படும் நபராக, அந்தத் துயர்மிகு நாள்களை அசை போடும் போதெல்லாம் பயந்து ஒடுங்கும் கதாபாத்திரமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணாவாக நடித்திருக்கும் தர்ஷன் குமார் சிறப்பாக நடித்திருந்தாலும் வாட்ஸ் அப் குழுக்களைக் கடந்து எந்தவித பொதுஅறிவும் இல்லாத ஒரு கதாபாத்திரமாக எழுதப்பட்டிருப்பதால், அந்தக் கதாபாத்திரத்தின் மேல் எந்தவொரு பிணைப்பும் வர மறுக்கிறது. நாள்தோறும் தங்களுக்குக் கிடைக்கும் பொய்ச் செய்திகளை மட்டுமே நம்பிக்கொண்டு அதுதான் உலகம் என இருக்கும் மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அவரின் கதாபாத்திரம் நீள்கிறது. மிதுன் சக்ரபோர்த்தி, பிரகாஷ் பெலாவடி, அதுல் ஸ்ரீவஸ்தவா, பல்லவி ஜோஷி போன்றவர்கள் படத்தின் சென்டிமென்ட்டை காட்சிகளைப் பலப்படுத்தி உள்ளனர்.

இந்தியாவில் அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கின்றன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள், ராணுவ அத்துமீறல், வறுமை, ஜாதிய ரீதியிலான கொடுமைகள் என இந்தியாவுக்குள் இனக் குழுக்களின் இடப்பெயர்வு என்பது காலம் காலமாக நடந்துகொண்டிருக்கின்றன. எழுத மறுத்த விரல்களும், கேட்க செவி சாய்க்காத காதுகளும் அந்தக் கதைகளை நிச்சயம் ஒருநாள் கேட்கும்.

சர்வதேச ஊடகங்கள் பெண்களையும், குழந்தைகளையும் வெறுமனே காட்சிப் பொருள்களாக்கி தவறான ‘க்ளிக்பெய்ட்டுகளை’ வைத்து போலியான செய்திகளை பரப்புவதாகக் குற்றம் சாட்டுகிறார் இயக்குநர். உண்மையில், ‘காஷ்மீரி ஃபைல்ஸ்’ படத்தில் பெண்கள், குழந்தைகளை வைத்து அழுகையைத் தூண்டும் வக்கிரக் காட்சிகளைத்தான் எடுத்திருக்கிறார் விவேக். இந்தியாவின் மெஜாரிட்டியான ஒரு மதம், மைனாரிட்டிகளாக ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்படும்போது என்ன ஆகும் என்கிற பார்வை எல்லாம் படத்தில் சுத்தமாக இல்லை. Raliv, Galiv ya Chaliv (மதம் மாறு, வெளியேறு அல்லது செத்து மடி) என்கிற கோஷத்துடன் நடந்த காஷ்மிரி பண்டிட்களின் வெளியேற்றத்தை தனது அரசியல் சாய்வுடன் காட்சிப்படுத்தியிருக்கிறாரோ என்கிற சந்தேகம் பல இடங்களில் வருகிறது. அதிலும் காஷ்மீரில் தலித்துகள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் போன்றவர்களை ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் கொன்றனர் என்று ஆணித்தரமாக அடித்துப் பேசுவதெல்லாம், வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியன்றி வேறெதுவும் இல்லை.

தீவிரவாதிகளின் அரசியல் ஆதாயத்துக்கு ஒருபோதும் யாரும் எதற்காகவும் ஆதரவாக இருக்கப்போவதில்லை. ஆனால், யாரெல்லாம் தாராளவாதம் பேசுகிறார்களோ, யாரெல்லாம் காஷ்மிரிகள் குறித்தும் அங்கு நடக்கும் ராணுவ அத்துமீறல் குறித்தும் பேசுகிறார்களோ அவர்களை எல்லாம் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் எனக் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர். இந்தியாவில் ‘செக்குலரிசம்’ பேசுபவர்களை போலிகள் என வசைபாடுகிறார். காஷ்மீரி பண்டிட்கள் யூதர்களாகவும், காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் நாஜிக்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். பண்டிட்கள் விருப்பமன்றி தங்களின் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை இன அழிப்புடன் (Genocide) ஒப்புமைப்படுத்தி வாதம் செய்கிறார்கள்.

ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் கொடுமை காலத்தில்கூட ஜெர்மனியர்கள் சிலர் யூதர்களைக் காப்பாற்றிய வரலாறுகள் உண்டு. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘சிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம் கூட அதைப்பற்றித்தான் பேசியது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஒரு யூதர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்தின் போது நடந்த கொல்கத்தா கலவரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஹே ராம்’ திரைப்படத்தில்கூட நண்பர் கதாபாத்திரத்தில் முஸ்லிமாக ஷாருக்கான் நடித்திருப்பார். ஆனால், ‘காஷ்மீரி ஃபைல்ஸ்’ திரைப்படத்திலோ 5 வயது சிறுவன் முதல் வயது முதிர்ந்த பெரியவர் வரை எல்லா இஸ்லாமியர்களுமே தங்களின் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தீயவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். படத்தில் வரும் எல்லா இஸ்லாமியர்களுமே கெட்டவர்கள்தான். உண்மையில் இவ்வளவு வன்மத்துடன் இதற்கு முன் ஒரு இந்திய சினிமா வெளியானதே இல்லை எனலாம்.

சிறுவயதில் சிவா (கிருஷ்ணாவின் சகோதரர்) பள்ளியில் படிக்கும் போது உடன் படிக்கும் இஸ்லாமிய மாணவரால் ‘மஸ்ஜித் வேண்டும் எனச் சொல்லு’ என மிரட்டப்படுகிறார்.

அதே சிவா கிரிக்கெட் வீரர் சச்சினின் பெயரைச் சொல்லி ஆதரவு தெரிவிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களால் தாக்கப்படுகிறார்.

சிவாவின் தந்தையைக் காட்டிக்கொடுக்கிறார் பல காலமாய் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமியர்.

பண்டிட்டான அனுபம் கேர் காய்கறி சந்தையில் காய்கறி வாங்க காந்தி படம் போட்ட இந்திய ரூபாயை ஒரு முஸ்லிம் கடைக்காரரிடம் கொடுக்கிறார். அதற்கு அந்தக் கடைக்காரர் மீதி சில்லறையாக, ஜின்னா படம் போட்ட பாகிஸ்தான் பணத்தைக் கொடுக்கிறார்.

உன் உயிரையும், உன் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் என்னைத் திருமணம் செய்துகொள் என கிருஷ்ணாவின் தாயாரை மிரட்டுகிறார் இஸ்லாமிய முதியவர் ஒருவர்.

பல ஆண்டுகள் கழித்தும் இந்தச் சம்பவங்கள் குறித்து எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாத மனிதர்களாக அவர்கள் காட்டப்படுகிறார்கள். காஷ்மீரில் இருக்கக்கூடிய ஒவ்வொரு இஸ்லாமியரும் பிரிவினைவாதத்தையும், மத வெறுப்பையும் கொண்டவர்கள் என்பதையே நிறுவ முயல்கிறார் விவேக்.

உண்மைச் சம்பவங்களில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு மதச்சாயம் பூசி எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸ்தான் என்பதை மறைமுகமாகச் சொல்ல காஷ்மீரி பண்டிட்களின் வாழ்க்கையை பலிகடாவாக்கியிருக்கிறார் விவேக் அக்னிஹோத்ரி. படத்தில் குற்றம் சாட்டப்படும் தீவிரவாதிக்கான (ஃபரூக் மாலிக் பிட்டா) தண்டனை ஏன் கிடைக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகிறார் விவேக். JKLFன் முகங்களாக அறியப்படும் பிட்டா கராட்டே, யாசின் மாலிக் இருவர் செய்த கொலைகளை வைத்துத்தான் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் விவேக். பிட்டா கராட்டே பேசிய பேட்டியின் ஒரு வடிவமும் படத்தில் வருகிறது. ஆனால், பண்டிட்களைக் கொடூரமாக கொலை செய்த அந்த நபர் சிறைத்தண்டனையில் இருந்தார் என்பதை மட்டும் தெளிவாகத் தவிர்த்துவிடுகிறது படம். மாறாக, தான் நவீன உலகின் காந்தி எனச் சொல்வதை மட்டும் காட்சிப்படுத்துகிறது.

இதை அடிப்படையாக வைத்து கிருஷ்ணா பண்டிட் தன் கல்லூரியில் கொடுக்கும் அந்தச் சொற்பொழிவின் ஒரு சில பகுதிகள் ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ பாணியில் நீள்கின்றன. காஷ்மீரில் சாதுக்கள் வாழ்ந்தனர், அந்தப் பூமியே அறிவின் களஞ்சியமாகத் திகழ்ந்தது. அதை அபகரிக்கவே இஸ்லாமியர்கள் அங்கிருந்து இந்துக்களைத் துரத்தினர் என்றெல்லாம் பேசிக்கொண்டே போகிறார். உண்மை குறித்த தேடல் இல்லாத அவசரகதி உலகில் வாழும் மக்களால், இந்தக் காட்சிகள் க்ளிப்களாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு ஃபயர் விடப்படலாம் என்பதே இப்படத்தை இன்னும் ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், தங்களுக்குப் பிடித்த செய்திகள் மட்டுமே உண்மைச் செய்திகள் என நம்பும் கூட்டும், சமூக வலைதள வருகைக்குப் பின்னர் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அந்தக் கூட்டத்துக்கான சரியான தீனியை கொடுத்திருக்கிறார் விவேக். ‘தி காஷ்மிரி ஃபைல்ஸ்’ திரைப்படம் காஷ்மிரி பண்டிட்களிடம் பேசி எடுக்கப்பட்டவை என்றும், படத்தில் எந்த மதத்தையும் காயப்படும் நோக்கம் இல்லை என்றும் ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது. ‘சினிமா என்பதால் கற்பனைக் கலக்கப்பட்டுள்ளது, அதனால் இந்தக் காட்சிகள் உண்மைத் தன்மையுடன் இருக்க வேண்டியதில்லை’ என்கிற டிஸ்கிளைமரும் நமக்குக் காட்டப்படுகிறது. ஆனால், இதில் எதெல்லாம் உண்மை, எதெல்லாம் வரலாற்றுத் திரிப்பு என்பதை சாமானிய ரசிகனால் அறிந்துகொள்ளவே முடியாது.

-நன்றி: விகடன்


Share this News:

Leave a Reply