ரோஹினி திரையரங்கம் அருகே அஜீத் ரசிகர் லாரியில் டான்ஸ் ஆடியபோது உயிரிழப்பு!

Share this News:

சென்னை (11 ஜன 2023): சென்னை ரோஹினி திரையரங்கம் அருகே லாரி மேலே நின்று நடனம் ஆடிய அஜீத் ரசிகர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களை நோக்கி உள்ளது.

இருவரின் ரசிகர்களும், அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வெளியாகியுள்ளதால், திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.

அதன்படி அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டுள்ளது. இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ரசிகர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் விஜய் மற்றும் அஜித் பேனர்கள், திரையரங்கு கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் துணிவு படக் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ரோகிணி திரையரங்கம் முன்பு சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது ஏறி அஜித் ரசிகர் ஒருவர் நடனமாடிய போது கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Share this News:

Leave a Reply