இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் பலி – பரபரப்பு தகவல்!

Share this News:

லடாக் (16 ஜூன் 2020): இந்திய சீன எல்லையில் திங்கள் கிழமை இரவு நடைபெற்ற இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதாக லடாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு  இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ஜவான்கள் என மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா டுடே டிவியிடம் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மற்றும் சீன எல்லையில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள்கிழமை இரவு இரு ராணுவங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அப்போது இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சீனா இந்திய எல்லையில் அத்துமீறுவதாக இந்தியா குற்றம் சாட்டியது. இந்திய இராணுவம் சீனாவின் அத்துமீறல்களை கடுமையாக எதிர்த்ததுடன், இப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதற்காக உடனடியாக சீன ராணுவத்தை திரும்பப் பெறுமாறு கோரியது. இதற்காக இருதரப்பினரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: