மோடி, அமித்ஷா நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் – காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

Share this News:

புதுடெல்லி (27 ஜூன் 2020): சீனப்படைகளின் இந்திய ஆக்கிரமிப்பு, மற்றும் கொரோனாவை தடுப்பதில் தோல்வி ஆகியவற்றை திசை திருப்பவே மோடி அரசு என்னிடம் அமலாக்கத்துறை விசாரணையை ஏவி விட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மோடி மற்றும் அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்து என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். என்றும் அஹமது பட்டேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், வதோதராவை மையமாக வைத்து செயல்பட்டு வரும், ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம்.இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான நிதின் சந்தேசரா, சேட்டன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகியோர், வங்கியில், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதனை வேறு வழிகளில் செலவு செய்துவிட்டு தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் மகன் மற்றும் மருமகனுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றிய சுனில் யாதவிடம், அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, அகமது படேலின் மகன் பைசல், மருமகன் இர்பான் சித்திக் ஆகியோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு விசாரணை நடத்தினர்.

அடுத்த கட்டமாக, அகமது படேலிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் வயது முதிர்வு மற்றும் கொரோனா பரவல் காரணமாக அச்சம் இருப்பதால் விசாரணைக்கு தற்போதைக்கு வரமுடியாது என்று அஹமது பட்டேல் மறுத்துவிட்டார்.

இதன் பின், அகமது படேல் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டனர். இது தொடர்பாக, அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, அமலாக்கத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், டில்லி லுத்யன்ஸ் பகுதியில் உள்ள அகமது படேல் வீட்டுக்கு சென்றனர். அங்கு சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். படேல் அளித்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் உறவினர் ரதுல் பூரிக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., சோதனை நடத்தியது.

இந்நிலையில் அஹமது பட்டேல் தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது குறி வைத்து நடத்தப்படும் விசாரணை குறித்தும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இந்தியாவிற்குள் சீன படைகள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு மேற்கொண்டது, மற்றும் நாடே கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்க, கொரோனா பரவலை தடுக்க முடியாமல் மோடி அரசு தோல்வியுற்றவை , நாட்டில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை திசை திருப்ப காங்கிரஸ் தலைவர்கள் மீது அபாண்டமாக பழி போட்டு விசாரணையை ஏவி விட்டுள்ளது” என்று அஹமது பட்டேல் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் நண்பர்கள் எனது வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். சீனா நமது நிலத்தை கையகப்படுத்தியிருக்கும் நேரத்தில் கவனத்தை திசை திருப்ப இந்த அதிகாரிகளை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது. அதற்காக நான் வருந்துகிறேன்” என்று அஹமது பட்டேல் தெரிவித்துள்ளார்.


Share this News: