ட்ரம்பின் சமாதான முயற்சியை ஏற்க சீனா மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (29 மே 2020): எல்லைப் பிரச்சினைகள் குறித்த பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த வாய்ப்பை சீனா நிராகரித்துள்ளது.

முன்னதாக இந்தியா – சீனா எல்லை பிரச்னையில் அமெரிக்கா நடுவராகவோ அல்லது தூதராகவோ இருந்து இரு நாடுகளுக்கும் உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் பெரும் ராணுவ கட்டமைப்பை அமைத்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியா – சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. இதுபற்றி இரு நாடுகளிடமும் நாங்கள் தெரிவித்து விட்டோம். நடுவராகவோ அல்லது தூதராகவே இருந்து எல்லைப் பிரச்னையை தீர்க்கத் தயார்’ என்று கூறியிருந்தார்.

இதனை இந்தியா ஏற்க மறுத்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம், ‘தூதகர ரீதியில் இந்தியா – சீனா இடையிலான பிரச்னைகள் பேசப்பட்டு வருகிறது. எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. இதுதொடர்பாக பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

எல்லையில் நமது படைகள் சிறப்பாக செயல்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன. இந்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியா தனது எல்லையையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்காது.’ என்று பதில் அளித்தது.

இந்திய படைகள் சீனப் படையினரால் சூழப்பட்டதாகவும், இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் காயமடைந்ததைக் கண்டதாகவும் சிக்கிம் மக்கள் கூறினர். இப்பகுதியில் சீன மற்றும் இந்திய படைகள் ரோந்துப் பணியில் ஈடுபடுவதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரு தரப்பு வீரர்களும் ஒரு பேனர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

“இரு தரப்பினரும் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்ப்பதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தி வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Share this News: