எனக்கு எப்படி கொரோனா வந்தது? – இந்தியாவில் கொரோனா பாதித்தவரின் அனுபவம் -வீடியோ!

Share this News:

திருவனந்தபுரம் (20 மார்ச் 2020): கத்தாரிலிருந்து கேரளா வந்த இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைப் பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்து கேரளாவில் தனிமை சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் தமது அனுபவத்தை விளக்கியுள்ளார்.

“நான் திருச்சூர் மாவட்ட மருத்துவமனை தனிமை வார்டில் இருக்கிறேன். நான் கத்தாரிலிருந்து கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினேன். விமான நிலையத்திலிருந்து, என்னை அழைக்க வந்த தந்தையுடன் வீட்டுக்குச் சென்றேன். வீட்டிலும் வழக்கம்போல் நான் நார்மலாக இருந்தேன். இந்நிலையில்தான் கடந்த 6 ஆம் தேதி எனக்கு தொண்டை வலி ஏற்பட்டது. அதிகமாக குளிரூட்டப்பட்ட பழச்சாறைக் குடித்ததால் ஏற்பட்டதாக இருக்கும் என நினைத்து மருத்துவரைக் கண்டேன். அவர் வழக்கமாக அளிக்கும் மருந்தை அளித்தார்.

இந்நிலையில்தான் செய்தி சேனல்களில் ஒரு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதாவது என்னுடன் கத்தாரிலிருந்து கொச்சி பயணித்த இத்தாலியர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே நானும் மாவட்ட அரசு மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவர்கள் என்னை அங்கு வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். ‘வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா?’ என மருத்துவர்கள் கேட்டனர். ‘எனக்கு வயிற்று வலியும் வயிற்றுப் போக்கும் உள்ளது’ என்றேன். பின்பு எனக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. அதில் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனே என்னைத் தனிமை வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்.

உண்மையில் நான் பயந்ததைப் போல எதுவும் இல்லை, மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்கவே தனிமை வார்டில் எனக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போது நான் நல்லபடியாக உள்ளேன். எனக்கு தற்போது கொரோனா இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. மேலும் இரு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் வெளியில் நான் கேள்வியுறுவது ஆச்சர்யமாக உள்ளது. மக்கள் அச்சப்படும் அளவுக்கு தனிமை வார்டு என்பது அப்படி எதுவும் இல்லை. நமக்கும், மக்களுக்கும் நல்லது செய்யவே தனிமை வார்டு அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply