தலித் வாலிபர் சுட்டுக் கொலை – உயர் ஜாதி இளைஞர்களின் வெறிச்செயல்!

Share this News:

லக்னோ (08 ஜூன் 2020): உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் சனிக்கிழமை தலித் வாலிபரை சில இளைஞர்கள் சுட்டுக் கொன்றனர். டோம்கேடா கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இரவு 17 வயது விகாஸ் ஜாதவின் வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை பிரகாஷ் ஜாதவ் கூற்றுப்படி, “அவர் (மார்ச் 31 அன்று இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு) ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயர் சாதி கிராம இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், சவுகான் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் எனது மகனை கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தனர். அவர்கள் ஏன் இதைச் செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. பின்னர் அவர்கள் என் மகனை அடித்து சாதிவெறிப் பேச்சுக்களை பேசியுள்ளனர், ஆனால் அவர் சில உள்ளூர்வாசிகளால் காப்பாற்றப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.,

மேலும் “ஜாதவிற்கும் உயர் சாதி இளைஞர்களுக்கும் இடையிலான சண்டை குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சனிக்கிழமை இரவு, ஹோராம் சவுகான், லாலா சவுகான் உட்பட நான்கு பேர் என் வீட்டிற்கு வந்து, என் மகனை தூங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொன்றனர், எங்களை அச்சுறுத்தி ஓடிவிட்டனர்” என்று ஓம் பிரகாஷ் மேலும் கூறினார்.

சம்பவம் பற்றிய செய்தி பரவிய பின்னர், கிராம மக்கள் பீதியடைந்தனர். சமபவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

“பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், நாங்கள் நான்கு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நாங்கள் கைது செய்வோம். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.”என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் சாதீய வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: