அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு – திங்கள் கிழமை தேசிய அளவில் போராட்டம்!

Share this News:

புதுடெல்லி (09 டிச 2020): வேளாண் சட்டத்தை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேவேளை சில திருத்தங்கள் செய்ய எழுத்துப் பூர்வமாக அறிவிக்க தயாராக உள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். அனால் இதனை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 14-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மத்திய அரசு இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதுவரை டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாப் விவசாய சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர். இந்தநிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளை நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய அந்த பேச்சுவார்த்தை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. பஞ்சாபை சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் 8 பேர் மற்றும் தேசிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் 5 பேர் என மொத்தம் 13 பேர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது விவசாயிகளிடம் அமித்ஷா சில வி‌ஷயங்களை கண்டிப்புடன் தெரிவித்தார். 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ஒரு போதும் திரும்ப பெறவே பெறாது என்று உறுதிபட கூறினார்.

இதைக்கேட்டதும் விவசாய சங்க பிரதிநிதிகள் அப்படியானால் எங்களது முற்றுகை போராட்டமும் முடிவுக்கு வராது. எவ்வளவு நாளானாலும் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

இதற்கிடையே விவசாயிகளை சமரசம் செய்யும் வகையில் 3 வேளாண் சட்டங்களிலும் 3 முக்கிய திருத்தங்களை செய்ய தயாராக இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார். மேலும் அந்த திருத்தங்கள் என்னென்ன என்ற விவரத்தை எழுத்து பூர்வமாக உறுதி செய்து கொடுக்கவும் மத்திய அரசு தயார் என்று உறுதியளித்தார்.

ஆனால் பஞ்சாப் விவசாய சங்க பிரதிநிதிகள் அமித்ஷா தெரிவித்த கருத்தை ஏற்கவில்லை. புதன்கிழமை (இன்று) மதியம் விவசாயிகளுடன் கலந்து பேசிவிட்டு இதுபற்றி அதிகாரப்பூர்வமாக முடிவை தெரிவிப்பதாக கூறினார்கள்.

இதன்காரணமாக விவசாய சங்க தலைவர்களுடன் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை இழுபறியுடன் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே இன்று விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே டெல்லியில் 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக இன்றைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே அமித்ஸாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர். மேலும் போராட்டம் தொடரும் என்றும் வரும் திங்கள் கிழமை தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply