இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்பவுள்ளேன் – சீனா எல்லையில் உயிரிழந்த வீரரின் தந்தை உருக்கம்!

Share this News:

பாட்னா (17 ஜூன் 2020): சீனா இந்தியா இடையேயான மோதலில் உயிரிழந்த வீரர் அமன்குமார் சிங்கின் தம்பியையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பவுள்ளதாக அமனின் தந்தை தெரிவித்துள்ளார்.

பீகார் சமஸ்திபூர் மாவட்டத்தில் மொஹியுதீன் நகரில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமன் குமார். இவர் ஜூன் 15 ஆம் தேதி இரவு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புக்களுக்கும் சீன இராணுவத்தின் (பி.எல்.ஏ) படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிர் இழந்தார்.

அமன் குமாருக்கு மனைவி மினு தேவி, தந்தை சுதிர் குமார் சிங், தாய் ரேணு தேவி, இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். அமனின் மூத்த சகோதரர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், மூத்த சகோதரி பீகார் காவல்துறையில் உள்ளார். அவரது தம்பி பெற்றோருடன் உள்ளார்.

அமன் வீர மரணம் அடைந்த செய்தி அறிந்தது குறித்து அமனின் தந்தை சுதிர் குமார் சிங் தெரிவிக்கையில், “”நேற்றிரவு எனது மகனின் வீர மரண செய்தி இராணுவத்திடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் எனக்குக் கிடைத்தது. எனது மகன் நாட்டுக்காக தனது உயிரை விட்டதில் நான் பெருமை கொள்கிறேன்,. எனது இளைய மகனையும் இராணுவத்திற்கு அனுப்பி தாய்நாட்டிற்கு சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று சுதிர் குமார் சிங் கூறினார்.

அமன் 2014 ஆம் ஆண்டில் அமன் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். அவர் பிப்ரவரி 2019 இல் திருமணம் செய்து கொண்டார், இந்த ஆண்டு பிப்ரவரியில் லடாக் பிராந்தியத்தில் பணியமர்த்தப்பட்டார். லடாக்கிற்கு செல்லும் முன்பு ஊருக்கு வந்ததாகவும் 8 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் லடாக்கிற்குச் செல்வதற்கு முன் போனில் பேசிய அமன், ஜூலை மாதம் வீடு திரும்புவதாகவும், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தை சுதிர் குமார் சிங்கிற்கு டெல்லியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அமன் உறுதியளித்ததாக தந்தை சுதிர் குமார் சிங் தெரிவித்தார்.


Share this News: