சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் தூக்குத்தண்டனை வழங்கப்படும் முதல் பெண்மணி ஷப்னம் – பரபரப்பு பின்னணி!

Share this News:

லக்னோ (18 பிப் 2021): தனது குடும்பத்தின் ஏழு பேரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படுகிறது.

வழக்கின் பின்னணி:

அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல், ஷப்னம் வீட்டில், அவரது பெற்றோர் உட்பட ஏழு பேர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஷப்னத்தின் தொண்டையிலும், கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது, அடையாளம் தெரியாத சிலர், வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக, தெரிவித்தார்.

போலீசார் தீவிரமாக விசாரித்த போது, காதலன் சலீமுடன் சேர்ந்து, வீட்டிலிருந்த ஏழு பேரையும் கத்தியால் குத்தி கொன்றதை ஷப்னம் ஒப்புக் கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010லும், உச்ச நீதிமன்றம், 2015லும் உறுதி செய்தன. ஷப்னத்தின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதையடுத்து, ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியானது.

உத்தர பிரதேசத்தில், மதுராவில் உள்ள சிறையில், பெண்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தனி அறை உள்ளது. இந்த அறை, 150 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின், பெண் குற்றவாளி யாரும் தூக்கிலிடப்படவில்லை. மதுராவில் தான், ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி, விரைவில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘நிர்பயா’ குற்றவாளிகளை தூக்கிலிட்ட, மீரட்டைச் சேர்ந்த பவன் ஜலாட் தான், ஷப்னத்தையும் தூக்கிலிடுவதற்கான பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்துக்கு பின், தூக்கிலிடப்பட்ட முதல் பெண் குற்றவாளியாக ஷப்னம் இருப்பார்.

காதலுக்காக காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தினருக்கே பாலில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளார் ஷப்னம், பிறகு அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தன் உறவுக்கார சிறு குழந்தையையும் விட்டு வைக்கவில்லை.இந்நிலையில் சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி ஆனார் ஷப்னம். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் சிறை ஜவஹர் பாக்கில் உள்ளது.


Share this News:

Leave a Reply