உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

Share this News:

திருவனந்தபுரம் (14 மார்ச் 2022): கேரளாவின் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடரும் வகையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களின் கல்விக்காக பட்ஜெட்டில் 10 கோடியை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். மேலும், அதற்கான நிதியையும் அவர் ஒதுக்கியிருக்கிறார். மார்ச்11 அன்று நடந்த கேரள அரசின் பட்ஜெட் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.

உக்ரைனிலுள்ள பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில் கேரளாவின் 2,800 மாணவர்கள் பயின்றுவந்தனர். தற்போது போர் நடைபெற்றுவரும் உக்ரைன் நாட்டிலிருந்து தமிழக மாணவர்கள் 1800க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதைப் போன்று கேரளாவின் 2800 மருத்துவ மாணவர்கள் மீட்க்கப்பட்டு கேரளா திரும்பிவிட்டனர். ஆனால் அவர்களின் எம்.பி.பி.எஸ். கனவு, கனவாகவே போய்விடக்கூடாது. இடைமறிக்கப்பட்ட தங்களின் மருத்துவப்படிப்பு தொடரவேண்டும் என்கிற அவர்களின் தவிப்பை உணர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அவர்களின் கல்விக் கட்டணங்களை வட்டியில்லாமல் கட்டுவதற்காக முதற்கட்டமாக பட்ஜெட்டில் 10 கோடி நிதி ஒதுக்கி, அதை உக்ரைன் வாழ் வெளிநாடு மாணவர்களின் நலன்களைக் கவனிக்கிற லோர்க்கா ரூட் (LORKA ROOT) என்ற அமைப்பிடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பட்ஜெட்டை சமர்ப்பித்துவிட்டுப் பேசிய நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், “100 அல்லது 200 மாணவர்கள் எனில் இங்கேயே சேர்க்கலாம். 2800 மாணவர்களைச் சேர்ப்பது என்பது கடினம். அதனாலேயே அவர்களின் கல்விநலன் பொருட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு பிரச்சனை இருக்கும் அதனைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக கேரள அரசினால் அமைக்கப்பட்டது தான் லோர்க்கா ரூட் எனும் அமைப்பு.

உக்ரைன் கல்லுாரிகளில் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் பாதுகாப்பகாவும் இருக்கலாம். அல்லது போரில் எரிந்து நாசமாகியும் போயிருக்கலாம். அவற்றைத் திரும்பப் பெறவோ அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் தேவைப்படின் அதனையும் மேற்கொள்ளும் இந்த அமைப்பு, உக்ரைனின் கேரள மாணவர்களின் கல்வி எந்த வழிகளிலாவது தடையின்றி முற்றுப்பெற வேண்டிய காரியங்களைக் கவனிக்குமாம். தற்போதைய நிதி ஒதுக்கீடு போக, இது தொடர்பாக பின்வரும் காலங்களில் நிதி தேவைப்பட்டால் அதனையும் ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.

இந்த நிலையில், உக்ரைனிலிருக்கும் அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும் வரும் 21ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக பாடங்கள் தொடங்கும் என்று தங்களின் அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது.


Share this News:

Leave a Reply