ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டது தவறு – உச்ச நீதிமன்ற நீதிபதி!

Share this News:

புதுடெல்லி (20 செப் 2022): கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதாம்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் அத்தியாவசிய மதப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சென்றிருக்கக் கூடாது என்று நீதிபதி துலியா தெரிவித்தார்.

மேலும் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அத்தியாவசிய மதப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் செல்வதைத் தவிர்த்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.

ஹிஜாப் தொடர்பாக குர்ஆனில் இருந்து சில வசனங்களை மனுதாரர்கள் மேற்கோள் காட்டியதை பெஞ்ச் சுட்டிக்காட்டியது. ஆனால் இதனை எதிர்த்து வாதிட்ட துஷார் மேத்தா கூறுகையில், குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த நடைமுறை அவசியமாகிவிடாது. என்றார். ஈரான் போன்ற நாடுகளில் ஹிஜாபிற்கு எதிராக பெண்கள் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஹிஜாப் அணிய வேண்டும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்றும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கட்டாயமானது என்றும் மனுதாரர்கள் சார்பில் கூறப்பட்டதை நீதிபதி துலியா சுட்டிக்காட்டினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிஜாபை தடை செய்ததற்கான காரணம் என்ன? என்று கேட்டார். ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் தவே வாதிட்டார்.

நேற்றைய விசாரணையின் போது துஷ்யந்த் தவே, ஹிஜாப் என்பது சீக்கியர்களுக்கு தலைப்பாகை போன்றது என்றும், அது சீருடையில் இல்லை என்றும் கூறினார்.

இந்த வழக்கு குறித்த விசாரணை நாளையும் தொடரும்.


Share this News:

Leave a Reply