கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா!

Share this News:

புதுடெல்லி (06 ஜூலை 2020): கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களும் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று மட்டும் அதிகபட்சமாக ஏறக்குறைய 25,000 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்த இந்தியா, ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது.

29.5 லட்சம் பாதிப்பு, 1.3 லட்சம் உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 15.8 லட்சம் பாதிப்பு, 64,365 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,06,619 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 1,11,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

டெல்லியிலும் பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்ட 2,444 பேர் உட்பட, இதுவரை மொத்தம் 99,444 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News: