பில்கீஸ் பானு முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

Share this News:

புதுடெல்லி (05 ஜன 2023): பில்கீஸ் பானு வழக்கு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி விலகியுள்ளார்.

2002 கோத்ரா வன்முறையில் பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டமை பெற்ற 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி மீண்டும் விலகியுள்ளார். இதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. கடந்த மாதமும், பானோவின் மறுஆய்வு மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி பேலா திரிவேதி விலகினார்.

பில்கிஸ் பானுவின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில் நீதிபதி பேலா எம் திரிவேதி விலகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பில்கிஸின் மனுவுடன், சமூக சேவகர்கள் தாக்கல் செய்த மனுக்களும் பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் குஜராத் அரசும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

சிபிஐஎம் தலைவர் சுபாஷினி அலி, பத்திரிக்கையாளர் ரேவதி லால், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply