மகாராஷ்டிராவில் சிவசேனா போராட்டம் நடத்த திட்டம்!

மும்பை (25 ஜூன் 2022): மகாராஷ்டிராவில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.

இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் பல இடங்களில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலைப்பாட்டை சிவசேனா கட்சியினர் எடுத்துள்ளனர். அவரது புகைப்படம், பேனர் மீது மை தெளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னொரு அதிருப்தி எம்எல்ஏ திலீப்பின் போஸ்டர் மீதும் மை தெளிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் சிவசேனா தொண்டர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

மேலும் மாநிலத்தில் மும்பை உள்பட அனைத்து இடங்களிலும் சிவசேனா தொண்டர்கள் சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மராட்டியத்தின் மும்பை நகர் உள்பட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: