தொடரும் அதிர்ச்சி – ரெயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் இறந்த உடல் கண்டெடுப்பு!

Share this News:

ஜஹான்சி (29 மே 2020): உத்திர பிரதேசத்தில் இரயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. நடந்தே பலர் அவரவர்களின் ஊர்களுக்கு சென்றதால் உணவு இல்லாமை, களைப்பு காரணமாக பலர் வழியிலேயே உயிரிழந்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. மும்பையிலிருந்து உத்திர பிரதேசத்திற்கு ரெயிலில் பயணித்த 38 வயதான மோகன் லால் ஷர்மா என்ற புலம் பெயர்ந்த தொழிலாளி கையில் பணம் இல்லாமல் பயணித்துள்ளார். அவரின் இறந்த உடலை ரெயில் கழிப்பறையில் ரெயிலை சுத்தம் செய்யும் ஊழியர்கள் கண்டெடுத்துள்ளனர். அவர் ரெயிலிலேயே இறந்திருக்கக் கூடும் என தெரிகிறது.

ஷர்மா பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கக் கூடும் என்று உடலை கண்டு போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு பீகார் ரெயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த ஒரு பெண்ணின் உடல் கிடத்தப்பட்டிருக்க அந்த பெண்ணின் குழந்தை நடந்த சம்பவம் தெரியாமல் தாயை எழுப்பும் நெஞ்சை பிழியும் காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: