உலக நன்மைக்காக இந்தியா- ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும் – பிரதமர் மோடி!

Share this News:

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ஆலோசனை நடத்தினார்.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதிகளையும் பாதித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என்றார்.

மேலும், ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா உறவு மிகவும் இயல்பான உறவு. உலக நன்மைக்காக இந்தியா- ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த தொற்றுநோயின் பொருளாதார மற்றும் சமூக பக்க விளைவுகளை சமாளிக்க உலகிற்கு ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு அணுகுமுறை தேவை. ஆஸ்திரேலியாவுடனான உறவை விரிவுபடுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இன்றியமையாதது. இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகள் ஆழமடைந்துள்ளன. இந்த ஆழம் எங்கள் பகிரப்பட்ட மதிப்புகள், பகிரப்பட்ட ஆர்வங்கள், பகிரப்பட்ட புவியியல் மற்றும் பகிரப்பட்ட நோக்கங்களிலிருந்து வருகிறது.

பின்னர் கொரோனா காலத்தில் இந்திய மாணவர்களுக்கு உதவியதற்கு ஸ்காட் மோரிசனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

மாநாட்டில் உரையாற்றிய ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், நீங்கள் எப்போதும் தொழில்நுட்ப துறையில் ஒரு முன்னோடியாக இருந்தீர்கள். அடுத்த முறை இந்தியா வரும் போது, பாசமாக உங்களை கட்டியணைத்து சமோசா மற்றும் குஜராத் கிச்சடி கொடுப்பேன் என்றார்.

இந்தோ பசிபிக் பகுதியில் சீனா தனது ஆக்கிரமிப்பை அதிகரித்து வரும் பின்னணியில், ஆஸ்திரேலியா உடனான இருதரப்பு உறவுகள் மேம்படுமென நம்பிக்கை எழுந்துள்ளது.


Share this News: