ரம்ஜான் பண்டிகையின்போது விசமிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர் – முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (28 ஏப் 2022): ரம்ஜான் பண்டிகை தினத்தின்போது விசமிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாமல் அமைதியான வழியில் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என 14 முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் ஜமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் பிற 14 அமைப்புகளின் கையொப்பமிடப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “ரம்ஜான் பண்டிகை தினத்தன்று எல்லா முஸ்லிம்களும் ஈத்காவுக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் அமைதியை கடைபிடிக்கவும்; உங்களை தூண்டிவிட முயற்சிக்கும் எந்த சூழ்ச்சிக்கும் நீங்கள் பலியாகிவிடக் கூடாது; பெருநாள் சொற்பொழிவில் மிகவும் கவனமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

பரஸ்பர சகோதரத்துவம், அன்பு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் மத விழாக்களை, சமூக விரோதிகளும் தீய சக்திகளும் வெறுப்பைப் பரப்புவதற்கும், வன்முறையை தூண்டுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு இடமளித்துவிட வேண்டாம்.

ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ‘லைலத்துல் கத்ர்’ (ரம்ஜான் 27ஆம் நாள்) ஆகிய தினங்களில் முஸ்லிம்கள் அதிக அளவில் கூடுவார்கள். இந்த தினங்களில் அமைதியை கடைபிடிக்கவும். முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகை அன்று தங்கள் நாட்டு மக்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு, அனைவருடனும் நல்லுறவை வளர்த்து, அமைதியையும் நல்லுறவையும் நிலைநாட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சமூக விரோதிகள் மற்றும் தீய சக்திகள் எந்த இடையூறுகளையும் உருவாக்க வாய்ப்பளிக்கக் கூடாது” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply