மசூதிகளுக்கு அருகில் ஹனுமான் பாடல் ஒலிக்க தடை – மகாராஷ்டிரா காவல்துறை உத்தரவு!

Share this News:

நாசிக் (18 ஏப் 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹனுமான் ஊர்வலம் மற்றும் பஜனையின்போது மசூதிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒலிபெருக்கியில் ஹனுமான் பாடல் இசைக்க தடை விதித்து நாசிக் நகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகரின் காவல் ஆணையர் தீபக் பாண்டே ANI செய்தியாளர்களிடம் கூறும்போது, ​​“ஹனுமான் ஊர்வலம் மற்றும் பஜனைக்கு முன் அனுமதி பெற வேண்டும். மசூதிகளில் பாங்கு அழைப்புக்கு முன்னும் பின்னும் 15 நிமிடங்களுக்கு ஹனுமான் பாடல் இசைக்க அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் “எல்லா ஒலிபெருக்கிகள் மற்றும் டிஜேக்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளோம். சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. அமைதியை சீர்குலைக்க யாராவது முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மகாராஷ்டிரா அரசின் அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்றுவோம்” என்று நாசிக் காவல்துறை கமிஷனர் தீபக் பாண்டே கூறினார்.

முன்னதாக, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாசிக் காவல்துறை எச்சரித்தது.

மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கிகளில் ஹனுமான் பாடல்களை இசைப்போம் என்று மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்ததை அடுத்தது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிகாரிகளின் அனுமதியின்றி ஹனுமான் பாடல் வாசித்ததையடுத்து எம்என்எஸ் தலைவர் மகேந்திர பானுஷாலி காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply