முன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்!

பெங்களுரு (06 ஜூலை 2020): பெங்களுரில் ஆம்புலன்ஸ் பல மணிநேரங்கள் தாமதமாக வந்ததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களுரு, ஹனுமந்த் நகரைச் சேர்ந்த 65 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார்.அவருக்கு கொரோனா உறுதியானதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காலையிலிருந்து குடும்பத்தினர் முயற்சித்தும் ஆம்புலன்ஸ் வராமல் மாலை 7 மணிக்கு வந்துள்ளது.

அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்ல சில தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நடந்து சென்ற முதியவர், சாலையிலேயே மயங்கி விழுந்து, அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை சாலையின் ஓரத்தில் வைத்துக்கொண்டு, குடும்பத்தினர் அனைவரும் ஆம்புலன்ஸ் வருகைக்காகக் காத்திருந்திருக்கின்றனர். முதியவர் வீதியில் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெங்களுரு மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களுரு மாநகராட்சி அதிகாரிகள், விளக்கம் தரும்போது, “முதியவரின் வீட்டு வாசலுக்கு ஆம்புலன்ஸ் வர வேண்டாம் எனத் தெரிவித்துவிட்டனர். அதனால் அவரது வீட்டிலிருந்து 40 அடி தொலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அவர் நடந்து வரும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த அந்த முதியவர் அதிர்ச்சியுடனும் பதற்றத்துடனும் இருந்துள்ளார்.அவருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பிறகு, ஆம்புலன்ஸ் வந்ததும் இறந்த முதியவரின் உடல் விக்டோரியா மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. “இந்த விவகாரத்தில் எங்கு தவறு நடந்தது என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்” என பெங்களுரு கமிஷனர் தெரிவித்துள்ளார்.