பீகாரில் 32 இடங்களில் போட்டியிடும் அசாதுத்தீன் உவைசி கட்சி!

Share this News:

ஐதராபாத் (10 ஜூன் 2020): ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தலைமையிலான AIMIM கட்சி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களுக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.

AIMIM கட்சி பீகார் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கிஷன்கஞ்ச் தொகுதியை வென்ற கம்ருல் ஹுதா என்ற எம்.எல்.ஏ. வை தொடர்ந்து பீகாரில் மேலும் கட்சியை விரிவு படுத்த உவைசி கட்சி முன்வந்துள்ளது.

இதுகுறித்து பீகார் எய்ஐஎம் தலைவர் அக்தர் உல் இமான் தெரிவிக்கையில், “சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் 22 மாவட்டங்களில் 32 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். நிதீஷ் குமார் அரசாங்கம் அனைத்து முனைகளிலும் தோல்வியுற்றுள்ளது. நிதீஷ் குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது தற்கொலைக்கு சமமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு வலுவான சவாலை முன்வைக்க “ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன்” ஒரு கூட்டணியை ஏற்படுத்தவும் AIMIM முயன்று வருகிறது. “ஒரு வலுவான கூட்டணியைக் கட்டியெழுப்ப பல ஒத்த கட்சிகளுடன் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பாக விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடுவோம்” என்று அக்தர் உல் இமான் கூறினார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.


Share this News: