பிளாஸ்மா தானம் செய்வதாக சுமார் 200 பேரை ஏமாற்றிய ஹைதராபாத் மோசடிப் பேர்வழி கைது!

Plasma Donation
Share this News:

ஹைதராபாத் (22 ஜூலை,2020): வஞ்சகப் புத்தி கொண்டோருக்கு, சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் எப்படிப்பட்டதாக இருப்பினும் கவலை இல்லை.
கொரோனா நெருக்கடியால் முழு உலகமும் குறிப்பாக நமது நாடும் தத்தளித்து கடும் நெருக்கடியில் இருக்க, இந்த சூழலிலும் ஜெகஜ்ஜால கில்லாடி ஒருவன், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மா அணுக்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா தெரபி மூலம் பிளாஸ்மா தானம் செய்வதாக சுமார் 200 பேரை ஏமாற்றியிருக்கின்றான்.

plasma Arrest
plasma Arrest

ஹைதராபாத்தில் வசிக்கும் சந்தீப் ரெட்டி என்பவன் 200-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளான். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற, சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டுபிடித்து தொடர்பு கொள்வான். அவர்களிடம், தான் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாகவும், பிளாஸ்மா தானம் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி தன்னை அறிமுகம் செய்து கொள்வான். நோயாளிகள் இவரை நம்பிய பிறகு, தனது வேலையை காட்டத் தொடங்குவான் இந்த மோடிப் பேர்வழி! பிளாஸ்மா தானம் செய்ய தான் நேரில் வருவதற்கான பயணச் செலவுகளுக்கு பணம் அனுப்புமாறு கேட்பான். பின்னர்,ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை மூலம் அவர்கள் பணத்தை அனுப்பிய பிறகு தொடர்பை துண்டித்துக் கொள்வான். அதன் பிறகு அவனைக் கண்டுபிடிக்க இயலாமற் போகும்.
அதுமட்டுமல்ல, வேறு சில வேளைகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் விற்பவர் போல் தன்னை அறிமுகம் செய்தும் அவன் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தீப் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, சந்தீப் ரெட்டி இரண்டு திருட்டு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினம் சிறையில் இருந்துவிட்டு, சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டதாக ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதிது புதிதாக புறப்படும் இத்தகைய ஏமாற்று பேர்வழிகள், கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இளவேனில்


Share this News:

Leave a Reply