அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அப்படி பேசவில்லை- பிரதமர் அலுவலகம் விளக்கம்!

Share this News:

புதுடெல்லி (20 ஜூன் 2020): நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது தவறாக திசை திருப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின. தொடர்ந்து, லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்

இதில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, நம் நிலத்தின் ஒரு அங்குலத்தின் மீதும் யாருடைய கண் பார்வையும் கூட விழ முடியாத திறனை நாம் கொண்டிருக்கிறோம். என்றார்.

இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் சீன அத்துமீறல் பற்றி பிரதமர் மோடி கூறியதை தவறாக திசை திருப்புகிறார்கள். சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முயறியடிக்கப்பட்டுள்ளது.

ஊடுருவல் முயற்சியை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்து தடுத்தனர் என கூறினார். எல்லைக்கோட்டை தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றே பிரதமர் மோடி பேசினார். சண்டைக்குப்பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்றுதான் நரேந்திர மோடி பேசினார். சீனப்படைகள் ஊடுருவவில்லை என பிரதமர் கூறவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே இந்தியா தந்த பதிலடியில் சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. இதனை சீனா இதுவரை உறுதிபடுத்தவில்லை.


Share this News: