மேற்கு வங்கத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

Share this News:

கொல்கத்தா (07 ஜன 2020): டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக கொல்கத்தாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் காயம் அடைந்த 20 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை எதிர்த்து கொல்கத்தாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினார்கள். கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்தான் அங்கு போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார்கள். அவர்கள் இரண்டு நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்கள் நேற்று போராடும் போது போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லி உத்தரவிட்டனர். ஆனால் மாணவர்கள் கலைத்து செல்லவில்லை. அங்கு மாணவர்கள் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகம் ஆகிக்கொண்டே சென்றது.

இதனால் அங்கு போடப்பட்டு இருந்த தடுப்பு சுவரை மீறி மாணவர்கள் உள்ளே சென்றனர். காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த தடியடியில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். மாணவிகளும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Share this News:

Leave a Reply