பத்திரிகைத்துறை மீது ஜனாதிபதி காட்டம்!

Share this News:

புதுடெல்லி (21 ஜன 2020): நாட்டில் பத்திரிகைத் துறை பொய் செய்திகளின் கூடாரமாக உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில், விருதுகளை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

அவர் பேசுகையில், “பிரேக்கிங் நியூஸ் எனப்படும் செய்திகளை முதலில் அளிக்கும் பிணியால் ஊடகங்கள் பீடிக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டுப்பாடு, பொறுப்பு போன்ற பத்திரிகை தர்மத்தின் அடிப்படைகள் தகர்க்கப் பட்டுள்ளன.

தரமான ஒரு செய்தியை வெளியிடும்முன், என்ன, எப்போது, ஏன், எங்கு, யாரால், எப்படி போன்ற கேள்விகளை எழுப்பிப் பார்க்க வேண்டும். ஒரு பத்திரிகையாளர், பல பாத்திரங்களை ஏற்க வேண்டும். ஆனால், தங்களுக்குரிய பொறுப்புணர்வை சிந்திக்காமல், தற்போதைய பத்திரிகையாளர்கள் புலனாய்வாளர்களாக, விசாரணை அதிகாரிகளாக, ஏன், நீதிபதியாக மாறி விடுகின்றனர்.

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொய்ச் செய்திகள் வெளியிட்டு, இந்தத் தொழிலுக்கான புனிதத்தை கெடுத்து வருகின்றனர். சமூக மற்றும் பொருளாதார பேதம் தொடர்பான செய்திகள் வெளியிடுவது என்பது தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிகமானோர் பார்க்க வேண்டும், அதற்கான பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாற்றுப் பாதையில் சில ஊடகங்கள் செல்கின்றன.” என்றார் காட்டமாக.


Share this News:

Leave a Reply