அதானி குழும நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவு!

Share this News:

புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது,

பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் தற்போது ரூ.11.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ. 7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி தற்போது 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவ்விவகாரம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரத்தை வழங்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அதானி நிறுவனம் வங்கிக் கடனில் ஏதேனும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறதா என்று விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply