சிகிச்சை இன்றி சிறையில் உயிருக்கு போராடும் அதிகுர் ரஹ்மானை விடுதலை செய்ய கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (08 செப் 2022): பொய் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் வாடும் அதிகுர் ரஹ்மானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திர பிரதேசம் ஹத்ராஸில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பான் மற்றும் சமூக ஆர்வலர் அதிகுர் ரஹ்மான் ஆகியோர் உபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்டு பக்க வாதம் ஏற்பட்டு சிறையில் உயிருக்கு போராடும் அதீகுர் ரஹ்மானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. உபி காவல்துறையால் UAPA-ன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட அதிகுர் ரஹ்மான் ஜாமீன் கூட கிடைக்காமல் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அதீக்கிற்கு எதிராக நடப்பது பழிவாங்கும் செயல் என மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொய்யான குற்றச்சாட்டின் பேரில் அதிகுர் ரஹ்மான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகளுக்கு இது கேலிக்கூத்தானது. சிகிச்சை அளிக்க மறுத்தும், தாமதப்படுத்தியும் அதிகாரிகள் பழிவாங்குகின்றனர். இது முடிவுக்கு வர வேண்டும்” என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய வாரியத் தலைவர் அகர் படேல் கூறியுள்ளார்.

மேலும் “அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அரசியல் உள்நோக்கம் கொண்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும். அவர் தனது குடும்பத்தினருடன் வழக்கமான தொடர்பு வைத்திருப்பதையும், அவருக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். “ரஹ்மானை மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் தள்ளுவது மற்றும் போதுமான சிகிச்சை அளிக்கத் தவறியது மனித உரிமை மீறல்” என்று அகர் படேல் கூறியுள்ளார்.

இதற்கிடையே அதீக்கின் உயிரைக் காப்பாற்றுமாறு அவரது மனைவி சஞ்சிதா ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார். 2007 ஆம் ஆண்டு முதல், இதய வால்வுகள் பிரச்சனையால் அதீக் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதீக்கிற்கு பல மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிறையில் கூடுதல் சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால், உடல்நிலை மோசமடைந்தது. அதீக்கின் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு வருவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply