எச்.ராஜா போன்றவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுரை!

Share this News:

புதுடெல்லி (24 பிப் 2020): அரசை எதிர்த்தால் உடனே அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ‘ ஜனநாயகமும் எதிர்ப்புணர்வும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்களன்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தேர்தலில் ஒரு கட்சி 51 % வாக்குகளை பெற்றது என்றால் மீதமுள்ள 49% மக்களும் அடுத்த ஐந்து ஆண்டு காலம் எதுவுமே பேசக் கூடாது என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகத்தில் பங்கு உள்ளது. எல்லா அரசுகளும் சரியான திசையில்செல்வதில்லை.

ஒரு விஷயத்தில் நீங்கள் வேறுபட்ட கருத்து என்பது நாட்டை அவமதிப்பதாகாது. மாறுபட்ட சிந்தனைகள் உதிக்கும்போதே அங்கு எதிர்ப்புணர்வு உண்டாகும். கேள்வி எழுப்புவது என்பது ஜனநாயகத்தின் வழிவந்த உரிமையாகும்.

அமைதியான வழிகளை கடைபிடிக்கும் வரை எதிர்க்கட்சிகளுக்கு எப்போதுமே போராடுவதற்கு உரிமை உண்டு. சமீபத்தில் நீதிபதி சந்திராசூட் உரை ஒன்றில் தெரிவித்ததைப் போன்று, ‘ எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான ஜனநாயகத்தை தடுத்து விடும். எனவே அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது.

குடிமகன்களின் சிவில் உரிமைகளை பாதுகாக்கும் போதுதான் ஜனநாயகம் வெற்றியடைந்ததாகக் கருத முடியும். எதிர்கருத்துக்களுக்கு எப்போதும் முக்கியமான பங்கு உண்டு. அது ஊக்குவிக்கப்பட வேண்டும். நாட்டை வழிபடுத்துவதற்குத் தேவையான நல்ல வழிகளை கண்டடைய அது உதவும்.” என்றார்.

எதற்கெடுத்தாலும் தேச விரோதி என விமர்சிக்கும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா போன்றவர்களுக்குதான் நீதிபதி தீபக் குப்தா அறிவுரை வழங்கியுள்ளார்.


Share this News:

Leave a Reply