மினி மற்றும் மிடியுடன் மாணவிகள் பள்ளிக்கு வரலாமா? – ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை!

Share this News:

புதுடெல்லி (05 செப் 2022): கல்வி நிறுவனங்களுக்கு மாணவிகள் மினி அல்லது மிடி அணிந்து வர அனுமதிக்கலாமா? என்று ஹிஜாப் குறித்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடகா மாநில பாஜக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 23 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

அப்போது நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர்.

“கல்வி நிறுவனம் ஒரு விதிமுறைக்குட்பட்டது. ஆடை விவகாரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு சட்டம் இல்லையென்றால் கல்வி நிறுவங்களின் நிலை என்ன? உடை அவர்களது உரிமை என்றால் மினிஸ், மிடிஸ், என்ன வேண்டுமானாலும் அணிந்து வர அனுமதித்துவிட முடியுமா? ஹிஜாப் அல்லது தாவணியை அணிய உங்களுக்கு உரிமை இருக்கலாம், சீருடையை பரிந்துரைக்கும் கல்வி நிறுவனத்திற்குள் நீங்கள் உரிமையை எடுத்துச் செல்ல முடியுமா? கல்வி நிறுவனங்களுக்கு சீருடை விசயத்தில் மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கல்வியை அவர்கள் மறுக்கவில்லை,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. .


Share this News:

Leave a Reply