கொரோனா சந்தேகம் – அருகில் இருந்தும் இறந்த தந்தையின் உடலைபார்க்க முடியாமல் போன மகன்!

Share this News:

திருவனந்தபுரம் (15 மார்ச் 2020): கேரளாவில் இளைஞர் ஒருவர் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இறந்த அவரது தந்தையின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.

கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக, கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபெல் என்ற இளைஞர், கடந்த 8 ஆம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் லினோ அபெல், இவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக கத்தாரிலிருந்து கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமானநிலையம் வந்திறங்கிய லினோவுக்கு லேசான இருமல் இருந்ததால், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தானாகவே மருத்துவ அதிகாரிகளை அணுகி, கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லினோ அபெலின் தந்தை உடல் நலம் மிகவும் மோசமடைந்து கடந்த திங்கள் கிழமை மரணமடைந்தார்.

ஒரே மருத்துவமனையில் இருந்தபோதிலும் கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தனது தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாமல் போனது.

மருத்துவமனையிலிருந்து தனது தந்தையின் உடல் ஆம்புலன்ஸில் எடுத்து செல்வதை, அறையின் ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்துள்ளார் லினோ அபெல், அதன்பிறகு மொபைலில் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச்சடங்கைப் பார்த்துள்ளார்.

இதனையடுத்து தனது நிலை குறித்து அவர், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், விமான நிலையத்தில் தாமாகவே முன்வந்து மருத்துவக் குழுவை அணுகியிருக்காவிடில், தனது தந்தையை கடைசியாக ஒரு முறையாவது பார்த்திருக்க முடியும் என்றும்.

எனினும் தான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றும் தன்னை கொரோனா வைரஸ் தாக்கி இருந்தால், பலருக்கும் பரவிவிடும் என்கிற காரணத்தால், தாமாகவே மருத்துவமனையில் சேர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, வெளிநாடுகளிலிருந்து வருவோர் தயங்காமல் மருத்துவக்குழுவினரை அணுகி, தங்களது உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்’ எனக் லினோ அபெல் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே லினோ அபெலிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா இருக்கிறதா என எழுந்த ஒரே ஒரு சந்தேகம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத சோகத்தை இளைஞர் லினோ அபெலுக்கு ஏற்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply