டெல்லியில் மீண்டும் பதற்றம் – ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் – வீடியோ!

Share this News:

புதுடெல்லி (09 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் கொடூரமாக கையாண்டு கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் என்பது அம்பலமானது. ஆனால், அவர்களை விட்டுவிட்டு. மாறாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

இதனைக் கண்டித்தும், ஜே.என்.யூ துணைவேந்தரை நீக்க வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். மாண்டி ஹவுசில் தொடங்கிய இந்தப் பேரணியில் மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

போலிஸார் அனுமதி மறுத்ததும், அவர்களை எதிர்த்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து, போலிஸார் மாணவர்களைக் கைது செய்தனர். அப்போது மாணவர்களை போலிஸார் கடுமையாகக் கையாண்ட காணொளிகளும் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட மாணவர்கள் கோனாட் பேலஸில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தப் பேரணியை, வன்முறைத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply