மகாராஷ்டிராவில் அதிர்ச்சி – இரண்டு சாமியார்கள் உட்பட மூன்றுபேர் அடித்துக் கொலை!

மும்பை (20 ஏப் 2020): மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் கிராமத்தில் இரண்டு சாமியார்கள் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு சாமியார்கள் கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி வந்தது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் ஊரை சுற்றிலும் ஆயுதங்களுடன் பாதுகாப்புக்கு இருந்துள்ளனர்.

இந்த சூழலில், இரண்டு சாமியார்களும் சென்ற கார் அந்த பகுதியை கடந்த போது அதை மறித்த அந்த கும்பல் அவர்களை திருடர்கள் என நினைத்து தாக்க முற்பட்டனர். உடனே போலீஸூக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பயம் காரணமாக வீட்டில் பதுங்கி இருந்த கார் ஓட்டுநர் உட்பட 3 பேரை மீட்டு வெளியே கொண்டு வர முற்பட்டனர். ஆனால், அந்த கும்பல் தொடர்ந்து தாக்கியதில், 3 பேரும் பலியானார்கள்.

பலியான மூவரில் 70 வயது சாமியார். 35 வயது சாமியார் மற்றும் 30 வயது ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.

இச்சம்பவம் தொடர்பாக 110 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: