ஒன்றிய அரசுக்கு எதிராக ட்விட்டர் நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (06 ஜூலை 2022): கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரம் தொடர்பாக  ஒன்றிய அரசுக்கு எதிராக ட்விட்டர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த தளத்தின் செயல்பாடு, அதில் பதிவு செய்யப்படும் பதிவுகள் போன்ற காரணங்களால் முரண்பாடு நீடித்து வருகிறது.

இந்நிலையில், பதிவுகளை நீக்கும் பொருட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, இந்த வழக்கை சில ஆதாரங்களுடன் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் தளத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கணக்குகள் மற்றும் ட்வீட்களை அகற்றுமாறு அந்த நிறுவனத்தை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 4-ஆம் தேதிக்குள் அரசின் உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால், சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குற்றச் செயல்களைத் தூண்டும் விதமான பதிவுகளைக் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது எனவும், சட்டம் – ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவே கருத வேண்டும் என்றும் ட்விட்டரிடம் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் கருத்துப் பதிவுகள் விவகாரத்தில் நீதிமன்றத்தை ட்விட்டர் தரப்பு நாடியுள்ளது.

ஹாட் நியூஸ்: