கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்!

268

புதுடெல்லி (24 செப் 2020): கொரோனா பாதிப்பால் மத்திய ரெயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி (வயது 65) உயிரிழந்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் அங்காடி, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். சுரேஷ் அங்காடி கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகாவின் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

டெல்லியில் இருந்து சுரேஷ் அங்காடியின் உடலை சொந்த ஊரான பெலகாவிக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குகள் நடத்த அவரது குடும்பத்தினர் விரும்பினர். இதுபற்றி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி விரைவில் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் படிச்சீங்களா?:  மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

எனவே, டெல்லியில் வைத்து இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, லோதி சாலை சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுரேஷ் அங்காடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என உள்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது..