ஆசிரியர் தேர்வில் முறைகேடு – குடியரசுத் தலைவர் பெயர் தெரியாதவர் அதிக மதிப்பெண் எடுத்த அதிசயம்!

Share this News:

லக்னோ (10 ஜூன் 2020): உபியில் உதவி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்தது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வில், ராகுல் என்ற விண்ணப்பதாரர், தன்னை பணியில் சேர்ப்பதாகக் கூறி சிலர் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக பிரயாக்ராஜ் போலீஸ் விசாரணை மேற்கொண்டு கே.எல்.படேல் என்பவரைக் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தத் தேர்வில் 95 சதவீத மதிப்பெண்ணுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்த தர்மேந்திர படேல் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரோடு சேர்த்து அதிக மதிப்பெண் பெற்ற சந்தேகத்திற்குரிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, அவர்களிடம் இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் உள்ளிட்டவை போன்ற அடிப்படையான பொதுஅறிவு கேள்விகள் கேட்கப்பட்டபோது, அதற்குப் பதிலளிக்கவே அவர்கள் திணறியுள்ளனர்.

இதன்மூலம், அம்மாநில துணை ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் மேலும் ஒன்பது பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இப்போது நடைபெற்று வரும் பணித்தேர்வு முறைகளை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share this News: