வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது குறித்து சட்ட அமைச்சர் பதில்!

Share this News:

புதுடெல்லி (18 டிச 2022): ஆதார் அட்டை தற்போது நாட்டின் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. பள்ளி சேர்க்கை முதல் வங்கி வரை அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை கட்டாயம்.

பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இணைக்கப்படவில்லை என்றால் பான் கார்டு ரத்து செய்யப்படும். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்குமாறு குடிமக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் வசதியை தேர்தல் ஆணைய இணையதளம் வழங்கியுள்ளது.

ஆனால் வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் அட்டை இணைப்பது மக்களிடையே சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுமா? என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்கு மக்களவையில் கடந்த நாள் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். “ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க அறிவுறுத்தப்பட்டாலும், அவ்வாறு செய்யாத காரணத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட மாட்டாது” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

95 கோடி வாக்காளர்களில் 54 கோடி வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாளத்துடன் இணைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வமுள்ளவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று அல்லது தேர்தல் அதிகாரியைத் தொடர்பு கொண்டு இதைச் செய்யலாம்.


Share this News:

Leave a Reply