ஆப்கான் சிறையிலுள்ள இளம் பெண்ணை மீட்டுத்தர ஒன்றிய அரசுக்கு தாய் கோரிக்கை!

Share this News:

திருவனந்தபுரம் (19 ஆக 2021): மூளை சலவை செய்யப்பட்டு கடத்தப்பட்டு ஆப்கான் சிறையில் உள்ள மகளை மீட்டுத்தர வேண்டி தாய் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பிந்து சம்பத், இவர் ஒன்றிய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில், “திருவனந்தபுரத்தில் ஒரு பயிற்சி மையத்தில் இருந்த எனது மகள் நிமிஷா (பாத்திமா என பெயர் மாற்றிக் கொண்டார்) அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மூலம் மூளை சலவை செய்யப்பட்டார்.

இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 21 பேர் கேரளாவிலிருந்து ஐஎஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பில் இணைந்தனர். இதற்கு மூளையாக செயல்பட்டது அப்துல் ரஷீத் மற்றும் மேலும் 4 பேர்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத முகாம்கள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடத்திய போது நிமிஷாவின் கணவர் உயிரிழந்துவிட்டார். எனது மகள் கேரளாவிலிருந்து சென்ற போது அவர் 7 மாத கர்ப்பிணி. அவரை ஒரு நபர் அழைத்து சென்றது குறித்து நான் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஊடகங்களும், மற்றவர்களும் என் மகளின் தவறுக்காக என்னை கேவலமாக பேசினர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து ஆப்கான் தலைநகர் காபூலில் சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். எனது மகள் நிமிஷாவும் அந்த சிறையில் 2019 ஆம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் எனது 4 வயதான பேத்தியும் அடைக்கப்பட்டிருந்தார். அவர்களை ஆப்கான் சிறையிலிருந்து விடுவித்த நிலையில் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. எனது பேத்திக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பிறந்தநாள் வருகிறது. அவர்கள் இருவரும் தலிபான்களிடம் சிக்கியிருக்கலாம் என சந்தேகமடைகிறேன்.

அவர்களை விடுதலை செய்துவிட்டதாக செய்தி வந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அவர்கள் தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக செய்தியை அறிந்தவுடன் வேதனையாக இருக்கிறது. எனது மகள் தவறு செய்திருந்தால் அவர் அதற்குண்டான தண்டனையை இந்தியா சட்டங்களால் பெறட்டும். இதைத்தான் நான் 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தால் எனது பேத்தியை நான் பாதுகாத்துக் கொள்கிறேன். இல்லாவிட்டால் தீவிரவாதிகளுக்கு அவர் இரையாகிவிடுவார். அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை என தெரியவில்லை. எனது பேத்தியை நான் பார்த்தது கூட இல்லை. எனவே எனது மகளையும் பேத்தியையும் இந்தியாவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளதால், உலக நாடுகளே பரபரப்பில் உள்ளன.


Share this News:

Leave a Reply