ஆட்டம் காணும் பாஜக – அயோத்தியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்!

Share this News:

லக்னோ (13 ஜன 2022): உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடுகிறார்.

நாடே எதிர்பார்க்கும், உத்திர பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 2 பாஜக அமைச்சர்கள் உட்பட 6 பாஜக எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் பாஜக அங்கு ஆட்டம் கண்டுள்ளது.

இந்நிலையில் உ.பி.யில் ஆட்சியைத் தக்கவைக்க தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தியில் போட்டியிடுகிறார். டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் மாநில தேர்தல் குழு மற்றும் மையக் குழுவின் உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

கோரக்பூரில் உள்ள பிரதான கோவிலின் பூசாரியான யோகியை புனித நகரமான அயோத்தியில் அறிமுகப்படுத்தி இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் மூலம் மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது.

“ராமர் கோவில் போன்று இந்துக்களை இணைக்கும் பிரச்னை வேறு எதுவும் இல்லை, இது உணர்வுபூர்வமான பிரச்னை. அயோத்தி போன்ற தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தவிர வேறு யாரும் போட்டியிட வாய்ப்பில்லை. அவர் ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றாலும், அவரது வேட்புமனு மிகவும் அடையாளமாக உள்ளது” என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

2017ல் அயோத்தி தொகுதியில் பாஜகவின் வேத் பிரகாஷ் குப்தா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ராஜ்யசபா உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவ், மதுரா தொகுதியில் யோகி போட்டியிட வேண்டும் என்று கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இங்கு மக்கள் பிரதிநிதியாக அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா உள்ளார். மதுராவின் பிரஜ் பகுதியில் ஜன் விஸ்வாஸ் யாத்திரையை யோகி கொடியசைத்து தொடங்கிவைத்த பிறகு, அவர் அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று வதந்திகள் பரவியதும் கவனிக்கத்தக்கது.


Share this News:

Leave a Reply