கொரோனா வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி?

Share this News:

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவிய ‘கோவிட் 19’ வைரஸ் மனிதர்களிடம் இருந்தே மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு தும்மல், இருமல் பிரச்சனை இருந்துள்ளது.

இது சாதாரண வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு என்று அந்த மக்கள் கருதி இருந்தனர். ஆனால் கோவிட் வைரஸ் தாக்குதல் உயிர்க்கொல்லி என்பது பின்நாளிலேயே தெரிய வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம். எனவே நோய் தாக்கப்பட்டவர்களுடன் கைக் குலுக்கினாலோ அருகில் நின்று பேசினாலோ கூட எளிதில் ஒரு மனிதனிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். 2 நாட்களில் வறட்டு இருமல் ஏற்பட்டு, ஒரு வாரத்திற்குப் பிறகு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும். வழக்கமன சளித்தொல்லை, இருமல், காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைக் கொண்டிருக்கும். முதியவர்களையும், குழந்தைகளையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களையும் கொரோனா எளிதில் தாக்கக் கூடும். கொரோனா வைரஸ் உடலில் தீவிரமடைவதன் அறிகுறிகள் உறுப்புகள் செயலிழப்பு, நிமோனியா, அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும்.

கொரோனா வைரஸின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் அளவிலான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியாவிற்கான சிகிச்சையே அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. எச்.ஐ.விக்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து அதன் மூலம் மருந்து கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்பதால் நோய் பரவாமல் தடுப்பதே இப்போது முதன்மையானதாக இருக்கிறது. எனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது, வைரஸின் வீரியம் அவரவரின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு ஏற்ப குறையும் பட்சத்தில் தொடர்ந்து 28 நாட்கள் அவர்கள் மருத்துவக் கண்காணிப்பிலும் வைக்கப்படுகின்றனர்.

கொரோனா நோய் காற்றில் கலப்பது இல்லை. வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கலாம். கைகுலுக்குவதை நிறுத்திக் கொண்டு தமிழர்களின் அடையாளமான இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தலாம். தும்மல், இருமலின் போது துணியைக் கொண்டு மறைத்துக் கொள்ளலாம். சுடுநீரைப் பருக வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் சளி, இருமல் தொல்லை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

குளிரூட்டப்பட்ட பொருட்கள், ஐஸ்கிரீம்களை தவிர்த்தல் நல்லது. சமூக ஊடகங்களில் உலா வரும் தேவையற்ற செய்திகளை படித்தும், ஃபார்வேர்டு செய்தும் பீதியடையாமல் அரசு வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றினால் பதற்றத்தைத் தவிர்க்கலாம்.

நோய் பாதிப்பு இல்லாமலே மாஸ்க் போட்டுக் கொண்டு அலைய வேண்டியதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளியில் சென்று வரும் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் நல்லது.


Share this News:

Leave a Reply