இந்தியாவில் ஹிஜாப் தடை – களமிறங்கிய குவைத் – இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

Share this News:

குவைத் (18 பிப் 2020): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக குவைத் பெண்கள் குழுக்களும் அரசியல்வாதிகளும் களமிறங்கியுள்ளனர்.

ஹிஜாப் தடைக்கு எதிராக இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரீன் தீவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்முறைகள் குறித்து சர்வதேச சமூகம் மௌனம் சாதிப்பதை இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

‘நாம் ஒரே உடல் போன்றவர்கள்’, ‘எங்கள் சகோதர சகோதரிகளை மதிப்போம்’, ‘மனித உரிமைகள் நம்பிக்கையின் ஒருங்கிணைந்த பகுதி’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் இயக்கத்தின் முகமாக மாறிய முஷ்கனின் படமும் பதாகைகளில் இடம் பெற்றிருந்தது.

வழக்கறிஞரும் ஆர்வலருமான எஸ்ரா அல்-மத்தூக், மத பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்திய அரசு இஸ்லாமிய நாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய குடிமக்கள், அங்கு சுதந்திரமாக தங்கள் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் வாழ்வதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர் முகமது அல் அன்சாரி கூறுகையில், முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பதற்காக கல்வி கற்பதை தடை செய்வதை ஏற்க முடியாது என்றும், இந்திய அரசு மதங்களை மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் ஹிஜாப் விவகாரத்துக்கு குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 22 எம்.பி.க்கள் கூட்டறிக்கையில், ஹிஜாப் தடையானது மத சுதந்திரத்தை ஆக்கிரமிப்பதாகவும், சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் சர்வதேச அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this News:

Leave a Reply