இஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை!

துபாய் (19 மே 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளன. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசினைத் தொடர்பு கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு தெரிவித்திருந்தனர்.

அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும், இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் காழ்ப்புணர்ச்சிப் பதிவுகள் இடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்திருந்தன.

மேலும் சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்கள் மீது துவேஷக் கருத்துக்களை வெளியிடும் சங்கிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிந்து கொண்டு, இஸ்லாத்திற்கு எதிராக இவ்வாறு மதவெறியோடு செயல்படும் இந்தியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பீகார் சாப்ராவைச் சேர்ந்த பிரஜ்கிஷோர் குப்தா, என்ற சங்கி ஒருவர் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் இஸ்லாமிய வெறுப்பு கக்கும் நச்சுக் கருத்துகளைத் தெரிவித்ததற்காக அவர் பணிபுரிந்த நிறுவனமே அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

ராஸ் அல் கைமாவில் பணிபுரிந்த அவரை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நீக்கம் செய்ததாக நிறுவன மேலாளர் ஸ்டெவின் ராக் தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் மட்டும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளுக்காக மூன்று இந்தியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.