அதிகாலை பாங்கு அழைப்பு என்னை ஏதோ செய்தது – இஸ்லாத்தை தழுவிய பெண் நெகிழ்ச்சி!

Share this News:

துபாய் (25 ஏப் 2020): “இஸ்லாம் என்னை ஏதோ செய்தது. நான் கிறிஸ்தவராக இருந்தபோது இல்லாத நிம்மதி இப்போது உள்ளது. இஸ்லாத்தை ஏற்றதை மிகவும் பெருமையாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நினைக்கிறேன்” என்கிறார் ஹதீஜா (முன்னாள் ஷெர்லி ரோட்ரிகுஸ்).

ஸ்பானிஷ் கியூபனை சேர்ந்த ஹதீஜா கடந்த ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். துபாய் வந்த பிறகு அவர் இஸ்லாம் குறித்து தெரிந்து கொண்டதாகவும், அதுகுறித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன். சிறு வயதில் கத்தோலிக்க பள்ளிக்குச் சென்றபோது, கிறிஸ்தவம் குறித்து எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்பு என் குடும்பம் லண்டனுக்குச் சென்றது. அங்கு என் பத்திரிகைத் துறை படிப்பை முடித்தேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நான் துபாய்க்கு வந்தேன். இங்கு வந்த பிறகு என்னிடம் ஏதோ மாற்றம். என் மனதில் ஏதோ ஒரு உணர்வு. அது ஒரு ரமலான் மாதம். என்னால் இஸ்லாம் குறித்து உணர முடிந்தது. எனக்குள் ஏற்பட்ட உணர்வே அதற்கு உதாரணம்.

துபாய் சேக் ஜியாத் பெரிய மசூதியில் அதிகாலை தொழுகைக்கான அழைப்பு என் காதில் ஒலித்தது. அது என் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத புதுவித அனுபவம். என் மனதில் ஏதோ ஒரு அமைதியான உணர்வு. அதனை தொடர்ந்து ஆழ்ந்த உறக்கம்.

துபாயில் மீடியா தொடர்பான மேற்படிப்பை முடித்துவிட்டு மீண்டும் லண்டன் புறப்பட்டேன். அங்கு எனக்கு வேலை, என் குடும்பம் என எல்லாம் இருந்தபோதும் எதையோ இழப்பதை உணர்ந்தேன். அது இஸ்லாம் என்பது எனக்கு தெரிந்தது.

2018 ஆம் ஆண்டு மத்தியில் இஸ்லாம் குறித்து அதிகம் ஆராயத் தொடங்கினேன். ஏழே மாதங்களில் இஸ்லாம் மதத்திற்கு என்னை மாற்றிக் கொள்ள முடிவு செய்தேன். என் விருப்பத்திற்கு என் பெற்றோர் மதிப்பு கொடுத்தனர்.

ஜனவரி 19, 2019 அன்று நான் முஸ்லீம் மதத்திற்கு மாறினேன். அன்று முதல் என்னை சிறந்த முஸ்லிமாக ஆக்கிக் கொண்டேன்.

சென்ற வருடம் எனக்கு முதல் ரமலான். இதுவரை நான் பட்டினி கிடந்தது கிடையாது. எனினும் பசியுடன் நாள் முழுவதும் எப்படி கடப்பேன்? என்று பயந்தேன். ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பசிக்கவில்லை, மாறாக எனக்கு அந்த நாள் அமைதியாக சென்றது. சென்ற வருட ரமலானை மகிழ்வாகவே கழித்தேன்.

நான் என் பழைய உடைகளை மறந்து, ஹிஜாபுடன் இருக்கிறேன். பள்ளிகளுக்கு தொழ செல்கிறேன். நான் எப்படிப்பட்டவளாக இருந்தேன், இப்போது எப்படி இருக்கிறேன் என்பது அல்லாஹ்வுக்கு தெரியும். இவ்வருட ரமலானை மேலும் சிறப்பாகவும், வழிபாடுமிக்கதாகவும் கடத்த நினைத்துள்ளேன்.

நான் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. நான் செய்து வந்த வங்கி வேலையை விட்டுவிட்டேன். இப்போது ஊடக வேலைக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு ஹதீஜா தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply