சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை – பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!

Share this News:

ரியாத் (30 நவ 2022): சவுதியில் மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் எனவும், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

தபூக் பகுதி, துபா அல்-வாஜ், உம்லுஜ், மதீனா மற்றும் யாம்பு ஆகிய இடங்களில் நேற்று கனமழை பெய்தது. தபூக் பகுதியில் சில தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் பாறாங்கற்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மதீனா-அல் உலா சாலையின் இருபுறமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சாலை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த வழியாக செல்ல வேண்டிய பயணிகள் அல் உலா – கைபர் வழியாக செல்ல வேண்டும் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

தபூக் மாகாணத்தில் பலத்த காற்று வீசியதால் மின் கோபுரங்கள் தரையில் விழுந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மழை குறைந்த பகுதிகளில் சாலைகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மற்ற தடைகளை நீக்கி போக்குவரத்தை சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்பு மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply