ரியாத் தமிழர்களை மகிழ்வித்த தமிழர் திருநாள்!

Share this News:

ரியாத் (29 ஜன 2020): தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் என்ற முழக்கத்துடன் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் விழாவை, ரியாத்திலுள்ள கஸர் அல் அரப் (அரபகக் கோட்டை) மண்டபத்தில் கடந்த 24 ஜனவரி அன்று நடத்தியது.

2000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட இவ்விழாவுக்கு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைமை தாங்கினார். முன்னாள் துணைத் தலைவர் அருண் சர்மா விழா இயக்குநராகப் பொறுப்பேற்று அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட செய்திருந்தார்.

ஒருங்கிணைப்பாளர் அருண் சர்மா அனைவரையும் வரவேற்க, தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தனது உரையில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவை, மற்றும் இலக்கியப் பணிகளை எடுத்துரைத்தார். ரியாத் தமிழ்ச் சங்கத்தை இன மத பேதமின்றி அனைத்துத் தமிழர்கள் ஒன்றிணைந்து ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இன்சுவை இளவல், நகைச்சுவை நாயகர் திரு. மோகன சுந்தரம் தலைமையில் “அதிமகிழ்ச்சியான வாழ்க்கை அன்றா இன்றா?” என்ற தலைப்பில் மிகவும் ரசனையான பட்டிமன்றம் நடைபெற்றது. அன்றே என்ற அணியில் திரு.சஜ்ஜாவுத்தீன், திருமதி. ஸ்வப்னாமகேஷ், திரு. ஜாஃபர் சாதிக் ஆகியோரும் இன்றே என்ற அணியில் திரு. ஷாஜஹான், திருமதி மகேஸ்வரி நரேஷ்குமார், திரு. சிவராமலிங்கம் ஆகியோரும் கலகலப்பாகப் பேசி மகிழ்வித்தனர்.

சிறுவர் சிறுமியரின் அற்புதமான நடனங்கள் கண்ணுக்கு விருந்தளித்தன.

விழாவில் ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் விழா மலர் வெளியிடப்பட்டது. பல்வேறு நினைவுக் கேடயங்களும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை உயர்நிலைக் குழுவினரான செந்தில்குமார், நெளஷாத் அலீ, சதீஷ்குமார், சரவணன் ஆகியோருடன் இணைந்து அரவிந்த், சிவராமலிங்கம், வெற்றிவேல், இம்தியாஸ், ஷாஜஹான், ஜியாவுத்தீன், ஜமால்சேட், சஜ்ஜாவுத்தீன், ஷாஹுல் ஹமீத், ஜாஃபர்சாதிக், மதி, ஜவஹர், ஹைதர் அலீ, அபூபக்கர், வெங்கடேஷ் , சிக்கந்தர், ஷெரீஃப், லியோ, கஜ்ஜாலி, ஆரோக்கிய தாஸ், வேலுமணி, அலெக்ஸ், ராம்மோகன், ஷேக் தாவுத், மாலிக் இப்ராஹிம் உள்ளிட்ட செயற்குழுவினர் செய்திருந்தனர்.

காலத்துக்கும் பசுமையாக நினைவில் நிற்கும் ஒரு விழாவாக இது அமைந்திருப்பதாக ரியாத் வாழ் தமிழர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்


Share this News:

Leave a Reply