போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூட நம்பிக்கை!

Share this News:

மிழ் கூறும் நல்லுலகில் அலோபதியை விமர்சித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. அந்த அலைக்கு மாற்றாக மாற்று மருத்துவத்தை விமர்சனம் செய்த ஆங்கில் மருத்துவ நூல் எனும் வகையில் இந்த நூல் தனி கவனம் பெற்றுள்ளது. அதனால் தானோ என்னமோ அமேசான் கிண்டிலில் விற்பனையில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

பிற மருத்துவ முறைகளை போலி அறிவியல் என்றும் ஆங்கில மருத்துவம் என அழைக்கப்படுவது விஞ்ஞான மருத்துவம் எனவும் குறிப்பிடும் ஆசிரியர் தொற்று நோய்கள், பரவாத நோய்கள், இயற்கை, செயற்கை, எது சிறந்த மருத்துவம் என பல்வேறு விசயங்களைச் சுருக்கமாக கூறும் பாணி சிறப்பாக அமைந்துள்ளது.

முன்னோர்களை விட நாம் சிறப்பாக இருத்தலே நல்ல சமூகம் என சொல்லும் ஆசிரியர், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்போரைக் கேள்விக்குட்படுத்துகிறார். கோவிட் தடுப்பூசி குறித்த விவாதம் சூடுபிடித்திருக்கும் தற்போதைய சூழலில் தடுப்பூசி, சுகப்பிரசவமும் சிசேரியனும், மஞ்சள் காமாலை போன்றவை குறித்து விரிவாக விவரிக்கிறது இந்நூல்.

மயக்க மருந்து, தடயவியல், ஏழு தலைமுறை சதுரங்க வேட்டை, எர்வாமேடின் போன்ற தலைப்புகளில் ஏறி சிக்சர் அடிக்கிறார் ஆசிரியர். ஆனால் இதில் அரசே அங்கீகரித்த நில வேம்பு கசாயத்தை ஏற்று கொள்ள மறுத்தலும் சித்த / ஆயுர்வேதம் மூலம் ஏதும் நன்மையே நடக்காதது போலவும் ஆயுஷ் என்பதே நிருபிக்கப்படாத மருத்துவம் என்றும் பேசுவது நிச்சயம் பல மருத்துவ முறைகளுக்கு மத்தியில் ஒரு கலந்துரையாடலுக்கான வாசலை திறக்காது. மாறாக, முன் முடிவுடன் அலோபதியைத் தூக்கி பிடிக்கும் ஒரு புத்தகமாக இந்நூலைக் காண்பதற்கான வாய்ப்பு அதிகம்.

ஆங்கில மருத்துவத்தை குறை கூறுபவர்கள் அதற்காக அதை ஆராய்ந்தார்களா என கேட்கும் ஆசிரியர் கப்பிங் எனப்படும் ஹிஜாமா முறையைப் பற்றி எவ்வளவு ஆய்வு செய்தார் என்பது புரியவில்லை. ஏனெனில் வளைகுடா நாடுகளில் அரசே ஒத்து கொண்டதொரு மருத்துவ முறை அது.

ஆன்மிகத்தை மருத்துவத்துக்கு எதிரியைப் போல் சித்தரிக்கும் ஆசிரியர், இப்னு சீனா (அவிசென்னா), ஜஹ்ராவி, அல் ருஷ்த் போன்ற மருத்தவ மாமேதைகள் ஆன்மிகத்தால் உந்தப்பட்டே சத்திர சிகிச்சைக்கு உதவும் கருவிகள் முதல் H2SO4 வரை கண்டுபிடித்தனர் என்ற உண்மையை மூடி மறைத்தல் அல்லது தெரியாமல் பேசுதல் பிற மருத்துவ முறைகள் குறித்த அறிவு போதாமையைக் காட்டுகிறது.

நல்ல கலந்துரையாடலும் ஆரோக்கியமான விவாதங்களும் இந்தப் புத்தகத்தை ஒட்டி நடத்தப்பட்டால் தெளிவு பிறக்கலாம்.

புத்தகம் : போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூட நம்பிக்கை!
ஆசிரியர் : டாக்டர். சட்வா
பதிப்பகம் : நிகர் மொழி
பக்கங்கள் : 120

பொறியாளர் ஃபெரோஸ்கான்


Share this News:

Leave a Reply